×

நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் அரசு டாக்டர்கள், நர்ஸ்களுக்கு தொடர்பு: மேலும் ஒருவர் கைது

நாமக்கல்: கொல்லிமலை குழந்தைகள் விற்பனை விவகாரத்தில், அரசு டாக்டர்கள், நர்ஸ்களுக்கு தொடர்பு இருப்பது டிரைவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்டவிரோதமாக நடைபெற்ற குழந்தைகள் விற்பனை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நர்ஸ் உதவியாளர் அமுதவள்ளியை சிபிசிஐடி போலீசார் 2 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை அமுதவள்ளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கொல்லிமலை அரசு மருத்துவமனை டிரைவர் முருகேசன், புரோக்கர்கள் பர்வீன், நிஷா (எ) ஹசினா ஆகிய 3 பேரையும் நீதிமன்ற காவலில் எடுத்து, சிபிசிஐடி போலீசார் சேலத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று மாலை 3 பேரையும் நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

டிரைவர் முருகேசனிடம் நடத்திய விசாரணையில் கொல்லிமலையில் இருந்து குழந்தைகளை ராசிபுரத்துக்கு கொண்டு வந்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கொல்லிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரசவத்துக்கு வரும் பெண்கள், குழந்தையை பெற்ற பிறகு, அந்த குழந்தையை வளர்க்க விரும்பாமல் மருத்துவமனையிலேயே விட்டு செல்வர். இந்த குழந்தைகளை முருகேசன் அமுதவள்ளியிடம் ஒப்படைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சட்டவிரோத செயலுக்கு கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த காலங்களில் பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்களும் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் பற்றிய விபரங்களை முருகேசன் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த டாக்டர்கள், நர்ஸ்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

குழந்தைகள் விற்பனை வழக்கை கடந்த ஒரு வாரமாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ராசிபுரம் தனிப்படை போலீசார் கைது செய்த 8 பேரில், 5 பேரை மட்டும் இதுவரை சிபிசிஐடி போலீசார் விசாரித்துள்ளனர். மீதமுள்ள 3 பேரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தாலும், வழக்கில் போதுமான ஆதாரங்களை திரட்டுவதில் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக கொல்லிமலையில் சிபிசிஐடி போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தியும் குழந்தைகளை விற்பனை செய்த பெற்றோர்களை அடையாளம் காணமுடியவில்லை.

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் ஊழியர் சேலத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் சர்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் சாந்தியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஏற்கனவே 8 பேர் கைதான நிலையில் 9வது நபர் கைதாகியுள்ளார்.

Tags : Namakkal ,doctors ,Government ,nurses , Kollimalai, children sales, arrest
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...