×

கல்குவாரிக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு பாதையில் முள் வெட்டி போட்டு போராட்டம்

*20 ஆண்டுகளாக இருட்டில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஆத்திரம்

சூலூர் : சூலூர் அருகே 20 ஆண்டுகளாக 60 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்காத நிலையில், கல்குவாரிக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக குடியிருப்புகளின் வழியாக மின்கம்பம் நடுவதை எதிர்த்து பொதுமக்கள் பாதையில் முள் வெட்டி போட்டு போராட்டம் நடத்தினர்.  சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம்  பகுதியில் உள்ள தனலட்சுமி நகரில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக தங்களது வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க கோரி இப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,முதல்வர் அலுவலகம்  உட்பட பல்வேறு அரசு அலுவலகத்திலும் புகார் அளித்தும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ,மாணவிகள் படிப்பதற்கு பெரும் சிரமபட்டு வருகின்றனர்.மேலும் இரவு நேங்களில் விஷப் பூச்சிகள் மூலம் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனலட்சுமி நகர் அருகே உள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றிற்கு மின் இணைப்பு வழங்க முடிவு செய்த, மின் வாரியம் குடுயிருப்புகள் வழியாக உயர் மின் அழுத்த கம்பங்கள் நட ஏற்பாடு செய்தனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை பொருட்படுத்தாத மின்வாரிய இளம் பொறியாளர் சரவணன் அப்பகுதி மக்கள் வேலைக்குச் சென்ற பின்,  இயந்திரங்களைக் கொண்டு மின்கம்பங்கள் நட முயன்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் மின்வாரிய வாகனங்கள் மற்றும் கம்பம் கொண்டு வருவதற்கான வழியை முட்செடிகளை வெட்டிப் போட்டு தடை ஏற்படுத்தி போராட்டம் நடத்தினர்.  இது தொடர்பாக மின்சாரவாரிய பொறியாளர் சரவணனிடம் கேட்ட போது குடியிருப்புகள் கல்குவாரி அருகில் 300 மீட்டருக்குள் அமைந்துள்ளதால் சட்டப்படி மின் இணைப்பு கொடுக்கவில்லை என தெரிவித்தார்.

Tags : Kalkwari , stone quary, people. sulur,TN EB,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு...