×

போலீசாரின் கெடுபிடி சோதனையால் மீனாட்சியம்மன் கோயிலுக்கு குறைந்தது பக்தர்கள் வருகை

* உண்டியல் வருமானத்திலும் பாதிப்பு

மதுரை : போலீஸ் கெடுபிடி மற்றும் நிர்வாகம் அலட்சியத்தால் மீனாட்சியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. இதனால் உண்டியல் வருமானமும் பாதித்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீனாட்சியம்மனை தரிசிப்பதுடன், கோயிலையும் சுற்றி பார்த்து விட்டு செல்வது வழக்கம். தற்போது சில மாதமாக உள்ளூர் பக்தர்களின் வருகை மிக மிக குறைவாக உள்ளது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாவட்ட பக்தர்கள் தான் கோயிலுக்கு வருகின்றனர். இவர்களிடமும் சோதனை என்ற பெயரில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக உள்ளது.

இதனால் பலர் கோயில் வரை வந்து விட்டு தரிசனத்திற்கு செல்லாமல் கோயிலை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் ஊர் திரும்பி செல்லும் நிலையும் உள்ளது. கோயிலுக்கு உண்டியல் வருமானம் மிகவும் குறைந்து வருகிறது. தற்போது இலங்கை பிரச்னை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, பாதுகாப்பு எனக்கூறி பக்தர்களுக்கு கூடுதல் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அலங்காநல்லூரைச் சேர்ந்த கண்ணன் கூறும்போது, ‘‘கடந்த சில மாதமாக பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்ய மிக கஷ்டப்படுகின்றனர். சோதனை என்ற பெயரில் போலீசார் கெடுபிடி அதிகமாக உள்ளது. கோயிலை சுற்றி பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க முடியவில்லை. கோயிலில் ஓய்வு எடுக்க தனி அறைகளும் இல்லை. தற்போது வெயில் காரணமாக சித்திரை வீதிகளில் நடக்க முடியவில்லை. பழநி, திருச்செந்தூர் உள்ளிட்ட பெரிய கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. ஆனால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மிக மிக குறைவாக இருக்கிறது’’ என்றார்.

சமூக ஆர்வலர் மேல சித்திரை வீதியைச் சேர்ந்த கருப்பசாமி கூறும்போது, ‘‘திருப்பதி உள்ளிட்ட பெரிய, பெரிய கோயில்களில் சோதனைகள் இருப்பினும், பக்தர்களை சிரமத்திற்கு ஆளாக்குவதில்லை. பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்ல வசதிகள் உள்ளது. ஆனால் மதுரையில் கெடுபிடி அதிகமிருக்கிறது. கட்டணத்திற்கு மட்டுமே நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த வருடங்களில் மாதத்திற்கு ரூ.90 லட்சத்திற்கு மேலாக உண்டியல் வருமானம் வரும். ஆனால் தற்போது ரூ.76 லட்சத்தை தாண்டுவதில்லை. பக்தர்கள் கெடுபிடியில்லாமல் தரிசனம் செய்ய போலீஸ் அதிகாரிகளுடன் நிர்வாகம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அடிப்படை வசதியில்லை

பக்தர்களுக்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தற்போது அனல் தாக்கும் வெயிலில் கால்களை கீழே வைக்க முடியாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். கோயிலை சுற்றிலும் பக்தர்கள் நடந்து வர நிர்வாகம் வழி வகை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags : pilgrims ,Meenakshi Amman Temple , meenakshi amman Temple, madurai, police checking, devotees
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...