×

தறிகெட்டு ஓடியதால் அடுத்தடுத்து விபத்து 2 டூவீலர் மீது ஆம்னி பஸ் மோதி பெண் போலீஸ் உள்பட 4 பேர் பலி

மதுரை:  மதுரையில் அதிவேகத்தில் நிலைதடுமாறி ஓடிய ஆம்னி பஸ், அடுத்தடுத்து 2 டூவீலர்கள் மீது மோதியதில் பெண் போலீஸ் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.  மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் ஜோதி (34), தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவரது தோழி சத்தியவாணி(40), விருதுநகரில் வருவாய் உதவியாளராக பணியாற்றினார். இவரது மகள் சூர்யகலா(14). ஜோதி நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணியளவில் டூவீலரில் சத்தியவாணி மற்றும் அவரது மகளை அழைத்துக் கொண்டு, மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஜெய்ஹிந்த்புரம் நோக்கி சென்றார். இதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுப்பட்டி, மேற்குத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தன்(23). இவரது நண்பர் அழகப்ப நகரை சேர்ந்தவர் பிரவீன்(40).  இருவரும் மதுரையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தனர். இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு டூவீலரில் பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து அழகப்ப நகருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி அருகே தறிகெட்ட நிலையில், அதிவேகத்தில் வந்த ஆம்னி பஸ், ஆனந்தன் வந்த டூவீலரின் முன்புறத்தில் பயங்கரமாக மோதியது. அவரது டூவீலரை இழுத்தபடி சென்று, முன்னால் சென்ற  ஜோதியின் டூவீலர் மீதும் மோதியது. இதில் ஆனந்தன், பெண் போலீஸ் ஜோதி மற்றும் சத்தியவாணி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிறுமி சூர்யகலாவை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கும், பீரவீனை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். சிறுமி சூர்யகலா, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, ஆம்னி பஸ் டிரைவரான புதுக்கோட்டை மாவட்டம், கதவம்பட்டியை சேர்ந்த தர்மராஜை(30) நேற்று கைது செய்தனர். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.


Tags : bus crash girl police , accident, Omni bus,woman police
× RELATED நீட் தேர்வில் 720க்கு 720 பெற்று முதலிடம் தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனை