×

தில்லுமுல்லு ஆணையமானது தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

மதுரை:  தலைமை தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டுமென கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழக தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு ஆணையமாக மாறியுள்ளது. அதிமுக, பாஜவின் முறைகேடு தொடர்பாக புகார் கொடுத்தால் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. புகார் தொடர்பாக நீதிமன்றத்தையே நாட வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையம் பெரும் குழப்பத்தில் உள்ளது. மக்களையும் குழப்புகிறது. முதலில் 10 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்படும் என்றார்கள். பின்னர் 13 மக்களவை தொகுதியில் 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறினர். தற்போது 13 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த போவதாக  அறிவித்துள்ளனர். தினந்தோறும் மாறி, மாறி பேசி வருவதால் தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுகிறது.  தேனிக்கு 50 வாக்கு இயந்திரங்கள் கொண்டு வந்ததிலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இப்படி பல குழப்பமான சூழ்நிலையில்  வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையை எப்படி நடத்த முடியும்? அன்றைய தினம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம் கலந்த சூழ்நிலை உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீது நம்பிக்கை இல்லாததால், அவரை உடனடியாக மாற்ற வேண்டும். சிறப்பு பார்வையாளரை நியமித்து வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும்.

இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதி உட்பட 4 தொகுதிகளில் அதிமுகவினர் ரூ.5 ஆயிரம் வரை பட்டுவாடா செய்து வருகின்றனர். ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. எத்தகைய முறைகேடு நடந்தாலும் அதிமுக படுதோல்வியை சந்திக்கும்.  3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது கண்டனத்துக்குரியது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுக எந்த நிலைப்பாட்டையும் எடுக்கத் தயங்காது என்பது தெளிவாகிறது. மைனாரிட்டி அதிமுக ஆட்சியை காப்பாற்றுவதே சபாநாயகரின் பணியாக உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : K.Balakrishnan ,EC , Election Commission , immediately change,K.Balakrishnan
× RELATED 100 கூட தேறாது…தோல்வி பயத்தால் மோடிக்கு தூக்கம் போச்சு…கே.பாலகிருஷ்ணன்