×

நர்ஸ் அமுதவள்ளியிடம் 2 நாள் நடந்த விசாரணையில் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றது குறித்து திடுக் தகவல்: மேலும் பலர் சிக்குகிறார்கள்

சேலம்: . நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பாக விருப்ப ஓய்வு பெற்ற நர்சு அமுதவள்ளி, அவருடைய கணவர் ரவிச்சந்திரன். ஈரோடு தனியார் மருத்துவமனை நர்ஸ் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர்கள் அருள்சாமி, லீலா உப்ட 8 பேரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களில் அமுதவள்ளி, அருள்சாமி, முருகேசனை நாமக்கல் கோர்ட்டு உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்தனர். நேற்று முன்தினம் அவர்களை சேலத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து, சிபிசிஐடி எஸ்பி சாமுண்டீஸ்வரி விசாரணை நடத்தினார். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமக்கல் மாவட்ட போலீசார் விசாரணையில் 15 குழந்தைகள் விற்றதாக கண்டுபிடித்த நிலையில், சிபிசிஐடி விசாரணையில் அதன் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

கொல்லிமலையில் இருந்து மட்டும் 14 குழந்தைகளை வாங்கி வந்ததும், இவ்வாறு வாங்கப்பட்ட குழந்தைகளை புரோக்கர்கள் மூலம் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் விற்பனை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதில், குழந்தைகளை கொடுத்து பெற்றோர்களுக்கு குறைந்த பணத்தை கொடுத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வைத்து இருப்பதாக விசாரணையில் தெரிந்தது.

2வது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது.  இந்த விசாரணையில், குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொடுத்தது குறித்து கேள்வி கேட்டனர். இதில் பலருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்ததுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் போலி பிறப்பு சான்றிதழ் கொடுத்தவர்கள் விரைவில் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.  

தொடர்ந்து மூவரிடமும் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், அமுதவள்ளியிடம் நேற்று விசாரணை முடித்து சிபிசிஐடி போலீசார், நாமக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற இருவரிடமும் இன்று மாலை வரை விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, கொல்லிமலையில் சிபிசிஐடி போலீசார் முகாமிட்டு, குழந்தைகளை விற்பனைக்கு கொடுத்த பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெண் புரோக்கர்கள் 2 பேரை ஒருநாள் விசாரிக்க அனுமதி

குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் புரோக்கர்கள் பர்வீன்(35), நிஷா என்ற ஹசீனா(28) ஆகிய இருவரையும் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கருணாநிதி, இருவரையும் ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து இருவரையும் சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ரகசிய இடத்துக்கு விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். இன்று மாலை அவர்களை மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள்.

Tags : Hearing Nurse , Nurse Audhuvalli, 2-day trial, birth certificate for children, stupid information
× RELATED 7 இடங்களில் 106 டிகிரி வெயில்...