×

அரசு மருத்துவமனையில் 5 பேர் பலியான சம்பவம் வாடகைக்கு ஜெனரேட்டர் வாங்கி இயக்கியது அம்பலம்: விசாரணையில் பரபரப்பு தகவல்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டபோது ஜெனரேட்டர் இயங்காததால், வாடகைக்கு வாங்கி இயக்கிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையின்போது வென்டிலேட்டர் இயங்காத சம்பவத்தில் 5 பேர் பலியாயினர். மின்தடை ஏற்பட்டதுமே ஜெனரேட்டர்கள் இயங்கவில்லை.

மேலும், மின்தடை ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகே, ஜெனரேட்டரை வெளியில் வாடகைக்கு வாங்கி இயக்கியுள்ளனர் என்பது மருத்துவக்குழு விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொதுவாக ஜெனரேட்டரின் செயல்பாட்டை கண்காணிப்பது, இங்குள்ள பொதுப்பணித்துறை மின்பிரிவின் வேலையாகும். ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றனர்.

இடி, மின்னலால் அரை மணி நேரத்தில் ஜெனரேட்டரும் இயங்காமல் உள்ளது என மருத்துவமனை பொறியாளர்கள் தெரிவித்தபோதும், கண்காணிப்பில் போதிய கவனம் காட்டப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நேற்று மின்சாரத்துறையினர் மருத்துவமனை வளாகத்திற்குள் ஜெனரேட்டர்கள் உட்பட மின்சப்ளை உள்ள இடங்களில் ஆய்வு செய்தனர். ஒரு சில இடங்களில் சீரமைப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறும்போது, ‘‘தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு, அரசு மருத்துவமனையில் 5 பேர் இறந்த சம்பவம் குறித்த முதல்கட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவான அறிக்கை 2 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.

வென்டிலேட்டர் மாஸ்க் அணிந்து மனு

மதுரை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செயலாளர் செல்வா தலைமையில், வென்டிலேட்டர் மாஸ்க்கை முகத்தில் அணிந்தபடி மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் நாகராஜனிடம் அளித்த மனுவில், ‘‘ஐந்து நோயாளிகள் பலியான சம்பவத்தில் மருத்துவக்குழு விசாரணை என்பது கண்துடைப்பு நாடகம். அது தேவையில்லை.  

இதுதொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சாரம் தடைபட்டால் உடனடியாக இயங்கக்கூடிய புதிய யுபிஎஸ்சி மின் இணைப்பு இருந்தும், அதை பயன்படுத்தாமல் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

Tags : Government Hospital ,incident ,generator , Government hospital, 5 dead victims, rent generator, trial, thriller
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்