×

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து குளறுபடி குழப்பத்தின் உச்சக்கட்டமாக திகழும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி: வாக்கு எண்ணிக்கையாவது ஒழுங்காக நடைபெறுமா என சந்தேகம்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 10ம் தேதியில் இருந்து நேற்று வரை பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை சமாளிக்க முடியாமல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திணறி வருகிறார். அதனால், வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுமா என்ற சந்தேகம் தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, மார்ச் 10ம் தேதியில் இருந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

முதல்வர், அமைச்சர்கள் கட்சி பணிகளை தவிர, அரசு பணிகளில் எதுவும் ஈடுபட முடியாது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் முழு அதிகாரமும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அனைத்து துறை உயர் அதிகாரிகளும் தேர்தல் அதிகாரியின் அனுமதியை பெற்றுதான் தங்கள் பணிகளை செய்ய வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கை மூலம், அரசு அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி முறையான உத்தரவுகளை பிறப்பித்து, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக நடத்துவார் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர்களும், பொதுமக்களும் நம்பினர்.ஆனால் இதற்கு நேர்மாறாக, தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் முடிந்து 21 நாட்களுக்கு பிறகும், அதாவது நேற்று வரை தமிழகத்தில் ஒரு குழப்பமான நிலையே தொடர்ந்து வருகிறது.

இன்னும் வாக்கு எண்ணிக்கைக்கு 13 நாட்களே உள்ளது. இந்த 13 நாளில் இன்னும் என்னென்ன குழப்பங்கள் வரப்போகிறதோ என்ற அச்சம் அனைவருக்கும் எழுந்துள்ளது. காரணம், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 10ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றுள்ள குழப்பங்கள் அனைத்தும் எதிர்க்கட்சிகளை குறிவைத்தே நடத்தப்படுவது தெளிவாக தெரிகிறது.

அதாவது தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில், தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் உயர் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. குறிப்பாக டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றனர். அதேபோன்று, ஆளுங்கட்சிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அதாவது மாவட்ட கலெக்டர்களை மாற்ற வேண்டும் என்று கூறினர். குறிப்பாக சேலம் மாவட்ட கலெக்டரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

திமுக கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. அதேநேரம், இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு என்று தனி தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி நியமனம் செய்தது. அவரும் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், ஏப்ரல் 12ம் தேதி தமிழக உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி உள்ளிட்ட சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். ஆனால், அவரது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

அடுத்து, தேர்தல் ஆணையத்தின் நேரடி மேற்பார்வையில் செயல்பட்ட வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படையினர் ஆளுங்கட்சி வேட்பாளர்களையோ அவர்களது உறவினர்களின் பணம் நடமாட்டத்தையோ கண்டுகொள்ளவில்லை. அதற்கு மாறாக திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை குறிவைத்தே சோதனை நடத்தினர். உதாரணத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் போட்டியிட்ட வேலூர் தொகுதியில் சோதனை நடத்தினர்.

முதல் நாள் சோதனையில் ரூ.10 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினர். பின்னர் 2 நாளில் மீண்டும் சோதனை நடத்தி பல கோடி கைப்பற்றியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக வேலூர் தொகுதியில் தேர்தலையே ரத்து செய்துவிட்டனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் 14ம் தேதி கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் மற்றும் அவரது உறவினர்களை குறிவைத்து வருமான வரி சோதனை நடத்தினர்.

இந்த தொகுதியில் பாஜ வேட்பாளராக தற்போதைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இவரது தூண்டுதலின் பேரில்தான் வசந்தகுமார் உறவினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு ஒன்றும் சிக்கவில்லை.
அடுத்து தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கி இருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

ஆனால் அவரது வீட்டிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறும்போது, “மாவட்ட கலெக்டருக்கு வந்த செல்போன் தகவல் மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டதாக” கூறினார். இந்த தொகுதியில் பாஜ வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொகுதியில் உள்ள திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) வீட்டிலும் 2, 3 முறை சோதனை நடைபெற்றது.

அதேபோன்று தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் வாக்காளர்களுக்கு தொடர்ந்து பணம் கொடுப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. ஆனால், அவரது வீடு, அலுவலகங்களில் எந்த சோதனையையும் தேர்தல் ஆணையம் செய்யவில்லை. ஆனால், அமமுக வேட்பாளர் அலுவலகங்களில் சோதனை செய்து ரூ.1.5 கோடி கைப்பற்றியதாக கூறினர். சோதனையை தடுக்க முயன்றதாக கூறி துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. வேலூர் தொகுதி போன்று தேனியிலும் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், ரத்து செய்யப்படவில்லை.

இதுபோன்ற பல்வேறு குளறுபடிகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினமும் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது. கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட 48 மீனவர்கள் கிராமங்களில் ஓட்டுமொத்தமாக 45,000 வாக்குகள் நீக்கப்பட்டது. முட்டம், தூத்தூர், கலியப்பட்டினம் என கடற்கரை பகுதி மக்கள் ஓட்டுப்போட சென்றபோது, உங்கள் பெயர் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டனர்.

2016ம் ஆண்டு தேர்தலில் ஓட்டு போட்ட 45 ஆயிரம் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் குளறுபடியே இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பிரச்னை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அதேபோன்று, சென்னையில் 50 சதவீதம் பேருக்கு மேல் வாக்காளர் சிலிப் வழங்கப்படாததால், பலர் எந்த மையத்தில் தாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரியாமல் திரும்பி சென்றனர். இதனால் சென்னையில் உள்ள மூன்று தொகுதியிலும் வாக்கு சதவீதம் 65 சதவீதமாக குறைந்து விட்டது.

அடுத்து, வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 4 அடுக்கு பாதுகாப்பு, சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அனைத்து பாதுகாப்பையும் மீறி மதுரையில் பதிவான வாக்குகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அறைக்குள் ஏப்ரல் 20ம் தேதி பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்ளே புகுந்து ஆவணங்களை நகல் எடுத்துள்ளார்.

இதற்கு மாநகராட்சி ஊழியர்கள், கலால் துறை ஊழியர் ஒருவரும் துணை போய் உள்ளனர். இந்த 4 பேரும் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுபடி மதுரை ஆட்சியரும் மாற்றப்பட்டு புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் தொகுதியில் பதிவான வாக்குகள் தனியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும், சிசிடிவி கேமராவில் 2 மணி நேரம் வித்தியாசம் உள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் புகார் கொடுத்துள்ளார். இதனால் சென்னையில் இருந்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நேரடியாக சென்று ஆய்வு செய்து வந்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் தேனி தொகுதியில் 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளதை அங்குள்ள திமுக, காங்கிரஸ் கட்சியினர் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறும்போது, மறுவாக்குப்பதிவு நடத்துவதற்காக கொண்டு வரப்பட்டது என்றார்.

அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று எந்த கோரிக்கையும் வைக்கப்படாதபோது எதற்கு 50 இயந்திரங்கள் என்று கேள்வி எழுப்பினர். மேலும், தேனி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை வெற்றிபெற வைக்கவே வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற தேர்தல் ஆணையத்துடன் இணைந்து ஆளுங்கட்சியினர் திட்டமிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது, வாக்குப்பதிவுக்கு முன் நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவுகளை 46 ஓட்டுச்சாவடிகளில் அழிக்காமல் விட்டு விட்டனர். அதனால் அந்த 46 ஓட்டுச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்புள்ளது. அதற்கான முன்னேற்பாடாகத்தான் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றதாக கூறினார்.

அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த சில மணி நேரத்தில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் 13 ஓட்டுச்சாவடியில் வருகிற 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று கூறப்பட்டது. இதில் 10 ஓட்டுச்சாவடி ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாகும். அப்படியிருக்கும்போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியபடி 46 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடக்காமல் வெறும் 13 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைகள் அனைத்தும் குழப்பமான ஒரு நிலையையே ஏற்படுத்தி வருகிறது. இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெற 13 நாட்களே உள்ளது. இந்த 13 நாளில் இன்னும் என்னென்ன பிரச்னைகள் தமிழகத்தில் நடைபெற போகிறதோ என்ற அச்சம் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி தற்போது பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை ஆகும். சென்னையில் 50 சதவீதம் பேருக்கு மேல் வாக்காளர் சிலிப் வழங்கப்படாததால், பலர் எந்த மையத்தில் தாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரியாமல் திரும்பி சென்றனர்.

Tags : Chief Electoral Officer ,election ,announcement , Election, mess, Tamil Nadu Chief Electoral Officer, Vote count, Doubt
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...