×

உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல்: வழிமுறைகளை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று திமுக சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனைத் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஐந்து முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரை நியமனம் செய்து கடந்த மாதம் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையின் ஆணையர் மாநில தேர்தல் அலுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள பிடிஓக்களை வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்தல் மற்றும் வாக்குச்சாவடி அமைத்தல் தொடர்பான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் 2019ம் ஆண்டு வெளியிட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படவேண்டும்.

அதன் முதல் பகுதியில் “தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் - 2019” என்று குறிப்பிட வேண்டும். அதில் மாவட்டத்தின் பெயர் , ஊராட்சி ஒன்றியத்தின் பெயர், கிராம ஊராட்சியின் பெயர், வார்டு எண், பாகம் எண், வாக்குச்சாவடியின் எண், வாக்குச்சாவடியின் பெயர், வாக்குச்சாவடியின் வகை, சம்பந்தபட்ட வார்டில் அடங்கியுள்ள தெருக்களின் விவரம், தொடங்கும் வரிசை எண், முடியும் வரிசை எண், வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை இணைக்க வேண்டும். அதில் பெயர், புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண், தந்தை அல்லது கணவர் பெயர், வீட்டு எண், வயது, மாநிலம் ஆகியவை இடம் பெற வேண்டும். ஒரு பக்கத்தில் 30 வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற வேண்டும்.

இறுதியாக சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் யாரும் இந்த வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்று வாக்காளர் பதிவு அலுவலர் சான்று அளிக்க வேண்டும். தேர்தல் மற்றும் அலுவலக பயன்பாடு, பொது மக்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஒவ்வொரு வாக்களார் பட்டியலையும் 100 காப்பிகள் படியெடுத்து வைத்திருக்க வேண்டும்.

வாக்குச்சாவடி தொடர்பான பட்டியல் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அலுவலகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், வட்டரா வளர்ச்சி அலுவலர் அலுவலகம், கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். இதை தவிர்த்து வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றால் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதியின் அடிப்படையில் வைக்கலாம்.

Tags : election ,State Election Commission , Local Elections, Electoral List, Instruction, State Election Commission
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...