×

கடைகள் ஏலம், பணியாளர் நியமனத்தில் முறைகேடு இணை ஆணையர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்: அறநிலையத்துறையில் பரபரப்பு

சென்னை: கடைகள் ஏலம் விடுவது, பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு செய்த இணை ஆணையர் உட்பட 3 அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது இந்து அறநிலையத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான கடைகள் மற்றும் பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதை வெளிப்படையாக பொது ஏலம் விடாமல் நூற்றுக்கணக்கான கடைகள் மேல் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த வகையில் லட்சக்கணக்கில் பணம் கைமாறியது.

இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் சென்றது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் விதிகளை மீறி கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருப்பதும், இதனால் அறநிலையத் துறைக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதில் அப்போது இணை ஆணையராக இருந்த பாரதிக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமானது. இதைத் தொடர்ந்து தற்போது திருவேற்காடு கோயில் இணை ஆணையராக உள்ள பாரதியை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று சென்னை முகப்பேர் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சந்தான சீனிவாச பெருமாள் கோயிலில் 40 பணியாளர்கள் கமிஷனரின் ஒப்புதல் இல்லாமல் நியமிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில் 40 பணியாளர்களுக்கு உதவி கமிஷனர் சம்பளம் நிர்ணயம் செய்து பணியில் நியமனம் செய்திருப்பது தெரியவந்தது.

இதற்காக ரூ.1.5 கோடி வரை பணியாளர்களிடம் இருந்து லஞ்சமாக பணம் பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்பேரில் 2 செயல் அலுவலர்கள் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய உதவி ஆணையர் அன்னக்கொடியை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றாக துணை ஆணையர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. கடந்த 5 வருடங்களாக நடந்த விசாரணை அறிக்கையை மண்டல இணை ஆணையர் சமீபத்தில் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் துணை ஆணையர் ரமேஷ் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அதன் பேரில் துணை ஆணையர் ரமேஷை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாளில் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Attorney , Shops Auction, Employee Appointment, Abuse, Suspension, Charity, Thriller
× RELATED சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள்...