×

பைனலுக்கு போகப்போவது யாரு இன்று 2வது தகுதிச்சுற்று சென்னை - டெல்லி மோதல்

விசாகப்பட்டினம்: இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 2வது தகுதிச்சுற்றில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளில் வெற்றிப் பெறும் அணி பைனலில் மும்பையுடன் மோத ஐதராபாத் புறப்படும்.
சென்னையில் செவ்வாய்கிழமை நடைப்பெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில்  சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற வெளியேறும் சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை டெல்லி அணி போராடி சென்றது. அதனால் இன்று விசாகப்பட்டினத்தில்  நடைபெறும் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றிப்பெறும் அணி நாளை மறுதினம் ஐதராபாத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் விளையாடும். இறுதிப்போட்டிக்கு முன்னேற கடைசி வாய்ப்பு என்பதால் இரண்டு அணிகளும் வெற்றிக்கு வேகம் காட்டும். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

டெல்லி அணி இதுவரை 3முறை மட்டுமே அரையிறுதி/தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 11 ஐபிஎல் தொடர்களில் விளையாடி  2008ம் ஆண்டு 4வது இடமும், 2009, 2012ம் ஆண்டுகளில் 3வது இடமும் பிடித்தது. பலமுறை லீக் போட்டிகளில் கடைசி இடத்தைதான் டெல்லி பெற்றது. இந்த முறை பெயர் மாற்றத்துடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ள அணியாக பரிமளித்தது. லீக் சுற்றில் ரன் ரேட் அடிப்படையில் 3வது இடத்தை பெற்றாலும் முதல் 2 இடங்களை பெற்ற மும்பை, சென்னையை போல் டெல்லியும் 18 புள்ளிகளைதான் பெற்றிருந்தது. இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணி மற்ற அணிகளிடம் காட்டிய அதிரடி மூத்த வீரர்களை அதிகம் கொண்ட சென்னை அணியிடம் செல்லுபடியாகவில்லை. சென்னை அணியிடம் மட்டும் டெல்லிக்கு வெற்றி அனுபவம் குறைவாகதான் உள்ளது. இந்த  தொடரில் இந்த அணிகள் மோதிய 2 போட்டிகளிலும் சென்னை அணிதான் வெற்றிப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல  ஐபிஎல் தொடரில்  இந்த 2 அணிகளும் இதுவரை 20 முறை மோதியுள்ளன. அதில்  சென்னை அணி 14 முறையும், டெல்லி அணி 6 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன.

சென்னை அணி இதுவரை விளையாடிய 9 ஐபிஎல் தொடர்களிலும்   அரையிறுதி/தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 7 முறை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது. அதில் 3 முறை சாம்பியனாகி உள்ளது. அனுபவம் வாய்ந்த கேப்டன், திறமையான பந்து வீச்சாளர்களை வைத்திருக்கும் சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பலவீனமான ேபட்டிங்  வரிசையை கொண்டுள்ள அணியாக சென்னை இருக்கிறது. அதனை சுறுசுறுப்பாக விளையாடும் இளம் டெல்லி வீரர்கள் பயன்படுத்திக் கொண்டால் அந்த அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.  அதனை தடுக்க சென்னையும் முயற்சிக்கும். எனினும் வேகம், விவேகம் காட்டி   வெற்றி பெறும் அணி    விசாகப்பட்டினத்தில் இருந்து ஐதராபாத்  புறப்படும். அங்கு இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் களம் காணும்.

உத்தேச வீரர்கள் விவரம்
ெசன்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், பாப் டூ பிளிசிஸ், முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, எம்எஸ் டோனி(கேப்டன்-விக்கெட் கீப்பர்),  ரவீந்திர ஜடேஜா, டிவைன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர். டெல்லி கேப்பிடல்ஸ்: ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), காலின் முன்ரோ, ஷெர்பனே ரூதர்போர்டு, அக்சர் படேல், கீமோ பால், அமீத் மிஸ்ரா, டிரன்ட் போல்ட், இஷாந்த் சர்மா.

Tags : conflict ,FINAL ,Delhi ,Chennai , Chennai, Delhi, conflict
× RELATED விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு