×

பிஇ கட்டணம் ரூ.20 ஆயிரம் உயர்கிறது: அண்ணா பல்கலை. பதிவாளர் அதிர்ச்சி தகவல், மாணவர்கள் கலக்கம்

சென்னை: இன்ஜினியரிங் கல்விக்கட்டணம் வரும் கல்வியாண்டு முதல் ரூ.20 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிண்டிகேட் ஹாலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பல்கலைக்கழகத்தின் செயல்பாடு, பல்கலைக்கழகம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. சிண்டிகேட் கூட்டத்திற்குபின் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:சிபிசிஎஸ் முறையிலான பாடத்திட்டம் 2017ம் ஆண்டு முதல் அண்ணா  பல்கலைக்கழகத்தின் 4 கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளது.

தொழில்நுட்ப மாற்றம், தொழில்துறையின் தேவைக்கேற்ப பி.இ, எம்.இ பாடத்திட்டங்களில் சிறிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதே போல் 4 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் முதல் 7 செமஸ்டர்கள் நீங்கலாக 8வது செமஸ்டரில்  தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் கல்வி கட்டண உயர்வு தொடர்பாக ஏற்கனவே நடந்த  சிண்டிகேட் குழு கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டு, அதுதொடர்பான ஆவணங்கள் தமிழக அரசுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் ஜூன் மாதம்  முதல் இந்த கட்டணம் அமலாகும். தமிழகம் முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரி கட்டணம் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் உயர்த்தப்படும்.

பல ஆண்டுகளுக்குபின், கல்விக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. பிற  பல்கலைக்கழகங்கள், ஐஐடி ஒப்பிடும்போது இந்த கட்டணம் உயர்வு மிகக்குறைவு. இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் கூறினார். ஏற்கனவே உறுப்பு கல்லூரி கல்விக்கட்டணத்தை உயர்த்தப்போவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்ஜினியரிங் படிக்க திட்டமிட்டுள்ள ஏழை மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.

30,000 அரியர் மாணவர்களுக்கு வாய்ப்பு

பதிவாளர் குமார் மேலும் கூறுகையில், ‘‘2011ம் ஆண்டுக்கு முன்பாக இன்ஜினியரிங் முடித்து ஓரிரு பாடங்கள் அரியர் இருப்பதால் பட்டத்தை முடிக்க முடியாத மாணவர்கள் 30 ஆயிரம் பேர் உள்ளனர். ஏற்கனவே வாய்ப்பளிக்கப்பட்டு அந்த தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் பிரச்னையை சரியாக அணுக வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு, இறுதி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும். அந்த மாணவர்களுக்கு நவம்பர்/டிசம்பர் மாதங்களில் சிறப்பு தேர்வு நடத்தப்படும். சிறப்பு தேர்வு கட்டணம் செலுத்தி இதுவரை இன்ஜினியரிங் முடிக்காத 2010 ரெகுலேசன் மாணவர் அரியர் தேர்வுகளை எழுத அனுமதிக்கலாம் என்று  சிண்டிகேட் குழு கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டுள்ளது என்றார்.


Tags : registrar ,Anna University , PE Fee, Rs. 20 thousand, rises, Anna University registrar, shocked
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...