×

மோடி விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்: புதுவை முதல்வர் நாராயணசாமி பரபரப்பு பேட்டி

சென்னை: வடமாநிலங்களில் மோடிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார் என நாராயணசாமி கூறினார். சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:டெல்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் செய்து விட்டு வருகிறோம். இம்முறை டெல்லியில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் உச்சநீதிமன்றம் அந்த வழக்குகளை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டது.

அதே போல் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. துணை நிலை ஆளுநர் அந்த அதிகாரத்தில் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறுத்தி வைக்க அவர்கள் கோரியிருந்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. தற்போது நீதி வென்றுள்ளது. ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது.  

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை ஏற்கனவே கூறிவிட்டது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த 7 பேரை மன்னித்து விட்டு விட வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் எங்கள் தலைவரை கொலை செய்தவர்களை தண்டனையில் இருந்து விடுவிப்பதை தனிப்பட்ட முறையில் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும், காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஏற்றுக்கொள்வோம்.

தமிழகம், புதுச்சேரி உள்பட தென் மாநிலங்களில் எவ்வாறு மோடிக்கு எதிரான அலை வீசுகிறதோ, அதைப் போல் வட மாநிலங்களிலும், மோடிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நிச்சயமாக மே 23ம் தேதிக்கு பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மோடி விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Modi ,Narayanasamy ,home ,New Delhi , Modi, will be sent, new, Chief Minister Narayanasamy, interview
× RELATED கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு..