×

தென்காசி ரயில்நிலையத்தில் கழிவறை அருகே செயல்படும் கேன்டீனால் பயணிகள் அவதி

தென்காசி: தென்காசி  ரயில் நிலையத்தில் கழிவறை அருகே செயல்படும் கேன்டீனால் அவதிப்படும் பயணிகள், வேறு இடத்தில் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன்  உள்ளனர். தென்காசி ரயில் நிலையம் நெல்லை மாவட்டத்தின் 2வது பெரிய ரயில் நிலையமாகவும், தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் திகழ்கிறது. கேரள மாநிலம், மதுரை மற்றும் சென்னை மார்க்கம், நெல்லை  மார்க்கம் என 3 வழித்தடங்களில் பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் மறு மார்க்கத்திலும் தென்காசிக்கு பல்வேறு ரயில்கள் வந்து செல்கின்றன. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 15 ரயில்கள் தென்காசிக்கு வந்து செல்கின்றன.

பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் 23 பெட்டிகள் அதாவது 650 மீட்டர் நீளத்திற்கு உள்ளன. இதனால் ஒரு முனையில் இருந்து  உணவுப்பொருட்கள் வாங்க கேன்டீனை தேடி பயணிகள் வருவதற்குள் ரயில் புறப்பட்டு விடுகிறது.
இதனால் சிரமத்துக்கு உள்ளான பயணிகள் நலன்கருதி கூடுதலாக கேன்டீன் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த கேன்டீன் கழிவறைக்கு அருகே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கழிவறை அருகே துர்நாற்றம் வீசுவதால் முகம் சுழிக்கும்  பயணிகள், இங்குள்ள கேன்டீனில் உணவு பொருட்கள் வாங்குவதற்கு சற்று தயங்குகின்றனர். இவ்வாறு அவதிக்கு உள்ளாகும் பயணிகள், கழிவறைக்கு அருகே செயல்படும் கேன்டீனை அங்கிருந்து அகற்றிவிட்டு வேறு இடத்தில் அமைக்க  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

Tags : Canante ,toilet ,railway station ,Tenkasi , Tenkasi train station, toilet, canteen, passenger
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!