×

மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் : தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனை ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு இருந்த 5 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். மதுரையில் நேற்று முன்தினம் மாலை காற்றுடன் கூடிய மழை பெய்ததால், மதுரை நகரில் மின்தடை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஐ.சி.யூ.வில் இருந்த 5 பேர் மின்தடையால் உயிரிழந்தனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர்களின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உடனடியாக சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த 5 பேரில் மதுரை மேலூரை சேர்ந்த மல்லிகா, திண்டுக்கல்லின் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் மற்றும் விருதுநகரின் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் ஆகிய 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய மருத்துவமனை டீன் வனிதா மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது. ஆனால் இரண்டு ஜெனரேட்டர்களும் பழுதடைந்தால் அவற்றில் இருந்து மின்சாரம் பெற முடியவில்லை, எனினும் அவசரகால பேட்டரிகள் உதவியுடன் வென்டிலேட்டர்கள் இயக்கப்பட்டன என கூறினார். மேலும் ஐ.சி.யூ.வில் மரணம் அடைந்த 3 பேரில் 2 பேர் மாரடைப்பினாலும் மற்றும் ஒருவர் நோய் தீவிரமடைந்தும் உயிரிழந்துள்ளார் என்று தகவல் அளித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுரையை சேர்ந்த வெர்னிகா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் மதுரையில் கடந்த 7ம் தேதி இரவு பெய்த கனமழையால் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரும் பழுதடைந்ததால் செயற்கை சுவாசம் பெற்று வந்த 5 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. மதுரையில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறதா நிலையில், கருவிகளை முறையாக பராமரிக்கப்படாததும், மருத்துவர்களின் கவனக்குறைவுமே உயிரிழப்பிற்கு காரணம். ஆகவே இந்த சம்பவம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.


மேலும் அரசு மருத்துவமனைகள் கருவிகள் சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு உபகரணங்களை வைக்கவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என மற்றொரு பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தொடர்பாக தமிழக அரசு நிலை அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த குழு அமைப்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.



Tags : deaths ,Government hospital ,Madurai ,Tamil Nadu , Madurai Government Hospital,Death,power cut, Tamil Nadu Government,Status report
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...