×

ஈரானுடனான மோதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா..... இருநாட்டு மோதலால் இந்தியாவிற்கு பாதிப்பு

வாஷிங்டன்: ஈரானுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது கடுமையான தடைகளை விதித்துள்ளார். ஈரான் மீது அவர் தொடர்ந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறார். இந்த நிலையில் ஈரானின் இரும்பு, ஸ்டீல், அலுமினியம் மற்றும் தாமிர உற்பத்தி துறைகள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரான் அரசு அணுஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாகவும், தொடர்ந்து பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் கூறி அமெரிக்கா இந்த தடைகளை விதித்துள்ளது.

ஈரானுக்கு பொருளாதார ரீதியாக அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்து வந்தாலும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல் காத்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கியமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று, ஈரானுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது, அப்படி இறக்குமதி செய்தால் தடைகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா எச்சரித்துள்ளது.   

ஈரான் அமெரிக்கா இடையிலான மோதல் என்பது இருநாடுகளுடன் நின்றுவிடாது. இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுப்பதற்கில்லை. ஏற்கனவே ஈரானிடம் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி ஆகும் கச்சா எண்ணெய் அளவு குறைந்து வருகிறது. அதேவேளையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்யின் அளவு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஈரானிடம் இருந்து வாங்குவதை விட கூடுதல் தொகைக்குத்தான் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. இந்தியாவிற்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்க வழிவகை செய்ய முடியாது என்றும் அமெரிக்க தெரிவித்துள்ளது. 


Tags : conflict ,United States ,Iran , Iran, USA, India, Trump
× RELATED அமெரிக்காவில் டிக்டாக் தடை டிரம்ப் பரிசீலனை