×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தலாம்..... நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது ஐகோர்ட்

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வரும் 22-ம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதிகோரி தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு, ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22ல் நடந்த பேரணியின்போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்குகளை ஐகோர்ட் கிளை 2018, ஆகஸ்ட் 14ல் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. அப்போது சிபிஐ 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்த காலக்கெடு 2018, டிசம்பர் 14ல் முடிந்தது.  காலக்கெடு முடிந்து 5 மாதங்கள் கடந்தும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு காவல் அதிகாரி மீது கூட சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மே 22ல் நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடிவு செய்து, தூத்துக்குடி சிதம்பரம் நகர், விவிடி சந்திப்பு அல்லது எஸ்விஏ பள்ளி மைதானம் அல்லது தூத்துக்குடி நகரில் ஏதாவது ஒரு மண்டபத்தில் நடத்த அனுமதி கேட்டு காவல்துறையினரிடம் ஏப்ரல் 26ல் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்த 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மே 22ல் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று   விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், ‘‘மே 22ல் நினைவஞ்சலி கூட்டம் நடத்தினால் பிரச்னை வரும். மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் வேறு தேதியில் கூட்டம் நடத்துவது தொடர்பாக மனுதாரர் தரப்பு பரிசீலிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், “நினைவஞ்சலி கூட்டத்தை உள் கூட்டரங்குகளில் நடத்த அனுமதி வழங்கலாம். ஊர்வலம் நடத்தக்கூடாது. கூட்டத்தில்  யாரெல்லாம் பேசுகின்றனர். கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவர் என்ற விபரங்களை அரசு வழக்கறிஞரிடம் மனுதாரர் தரப்பு தெரிவிக்க வேண்டும்” என நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கேட்ட விவரங்களை மனுதாரர் தாக்கல் செய்தார். இதனையடுத்து நினைவஞ்சலி கூட்டம் நடத்த நீதிபதிகள் நிபந்தனையுடன் அனுமதி வழங்கி வழக்கை முடித்துவைத்தனர்.

நிபந்தனைகள்
* நினைவஞ்சலி கூட்டத்தில் 250 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.
* பெல் ஓட்டலில் காலை 9-11 மணிக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும்.
* நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொள்வோரின் பட்டியலை வழங்க வேண்டும்.
* கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

Tags : Thoothukudi ,gun victims ,meeting , Thoothukudi gunfight, memorial, high court Madurai branch,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!