×

கொளுத்தும் அக்னி வெயிலுக்கு மானாமதுரையில் மண் கூஜா விற்பனை ஜோர்

மானாமதுரை : வெயிலுக்கு இதமாக உடலுக்கும், மனதுக்கும் குளிர்ச்சி தரும் மண் கூஜாக்களை தயாரிக்கும் பணிகள் மானாமதுரையில் விறுவிறுப்படைந்துள்ளன. மண்பாண்ட தயாரிப்பு பொருட்களுக்கு தனிச்சிறப்பு பெற்றது சிவகங்கை மாவட்டம், மானாமதுரை. இங்கு தயாரிக்கப்படும் தவிலை வெளிநாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து வாங்கி செல்கின்றனர்.

மேலும், மண் பானைகள், தீச்சட்டிகள், புரவி உள்ளிட்ட பொருட்களும் அதிகளவு தயாரிக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. திருவிழா காலங்களில் விற்பனை களை கட்டும். இங்கு தயாரிக்கப்படும் மண் கூஜாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. கொஞ்சம் பெரிய சைஸ் ஜாடி போல தோன்றும் இந்த கூஜாக்கள் தயாரிப்பு சற்று வித்தியாசமானது. சாதாரணமாக மண் பானையின் அடிப்பகுதியில் ஆற்று மணலை கொட்டி உள்ளிருக்கும் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருப்பது வழக்கம். மண் கூஜாக்களும் தண்ணீரை குளிர்ச்சிப்படுத்தவே உதவுகின்றன.

சாதாரண மண் பானையின் தடிமன் ஒரு செமீ அளவில் இருக்கும். இதன் தடிமன் 2 செமீ. திறந்த வெளியில் வைத்தால் கூட  இதன் குளிர்ச்சியில் மாறுபாடு தெரியாது. அடிப்பகுதி தட்டையாக இருப்பதால் ஆற்றுமணல் தேவையில்லை. மண் பானையை விட கூடுதல் குளிர்ச்சி இருக்கும். இருபுறமும் கைப்பிடி உள்ளதால் எளிதில் தூக்கி செல்லலாம். மூடியும் உண்டு.

இது குறித்து மண்பாண்ட தயாரிப்பாளர்கள் கூறுகையில், மண் கூஜா ரூ.25 முதல் 45 வரை அளவை பொறுத்து விற்பனையாகிறது. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மண்கூஜாக்களை வாங்கி செல்கின்றனர். வெளிமாநிலங்களில் மொத்தமாகவும் வாங்கி செல்கின்றனர். வீடுகளில் மட்டுமல்ல, ஸ்டார் ஓட்டல்களிலும் கூட மண் கூஜாக்களை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். ஆரோக்கியமான முறையில் உடலுக்கும், மனதுக்கும் குளிர்ச்சியை தரும் மண் கூஜாக்கள் விற்பனை தற்போது மானாமதுரையில் களை கட்டி வருகிறது என்றனர்.


Tags : summer,Manamadurai ,Pot sale
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...