×

ராஜீவ் காந்தி கொலை வழக்கு...... 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன்  உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிராக, அந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.  

அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதாக தமிழக அரசு எடுத்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டதோடு, அரசியல் சாசனத்துக்கும் எதிரானது.  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது மற்றும் அவர்களை விடுதலை செய்வது போன்றவை ஆளுநர் மற்றும் ஜனாதிபதியின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இந்த வழக்கு இருப்பதால் அவரே முடிவு எடுப்பார் எனக்கூறி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags : Rajiv Gandhi ,rulers ,Supreme Court , Rajiv Gandhi, murder case, Supreme Court
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...