×

ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் செம்மண் சாலை உடைந்ததால் மீண்டும் போக்குவரத்து நிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் பைக், ஆட்டோ, கார் ஆகிய வாகனங்கள் செல்ல தற்காலிகமாக புதிதாக அமைக்கப்பட்ட செம்மண் சாலை உடைந்து, மீண்டும் ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த நவம்பர், டிசம்பரில்   பெய்த மழையால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் உள்ள தற்காலிக தரைப்பாலம் 2 இடங்களில் உடைந்து சேதமடைந்தது. இதனால், கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி முதல் ஊத்துக்கோட்டை  –  திருவள்ளூர் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இதனால், ஊத்துக்கோட்டை அதை சுற்றியுள்ள பொதுமக்கள் பெரியபாளையம், தாமரைப்பாக்கம் வழியாக 40 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு திருவள்ளூர் சென்றனர். மேலும், அனந்தேரி, போந்தவாக்கம் என 50 கிராம மக்கள் புதிதாக கட்டப்படும் பாலத்தின் மீது ஏணி மூலம் ஏறி ஊத்துக்கோட்டைக்கு வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வந்தனர். பின்னர், புதிதாக கட்டப்படும் பாலத்தின் வலது புறத்தில் தற்காலிகமாக செம்மண் சாலை  அமைக்கப்பட்டது. இதில், டிசம்பர் 26ம் தேதி  முதல் பைக், ஆட்டோ, கார் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், மக்கள்  நிம்மதியடைந்தனர்.  மேலும், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல ஏற்கனவே சேதமடைந்த தற்காலிக மாற்று பாதையான தரைப்பாலத்தை ஆற்றில் தண்ணீர் வடிந்த பிறகு சீரமைக்கப்படும். பின்னர், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும்  என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 300 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக புதிய செம்மண் சாலையும் உடைந்து மூழ்கியது. மீண்டும் ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால், பைக், ஆட்டோ,  கார்களின் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், மக்கள் தவித்து வந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் மீது நடந்து பொதுமக்கள் செல்ல பாலத்தின் இருபுறமும் இரும்பு படிக்கட்டுகள் அமைத்து கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் படிக்கட்டுகள் அமைப்பதற்கு முன்பு 4 மணி நேரம், அங்கு காத்திருந்து இரும்பு படிகள் அமைத்த பிறகு தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஊத்துக்கோட்டை ஆற்றின் குறுக்கே  27 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் செம்மண் சாலை உடைந்ததால் மீண்டும் போக்குவரத்து நிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Putukkotta Auriyadu ,BUPUPKKOTA ,Paraniyadu ,Uthukkotta Aranyadu ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா...