×

சொந்தமாக விமானம் தயாரித்த பாப்கார்ன் வியாபாரி

இஸ்லாமாபாத்: புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆழமான தொழில்நுட்ப படிப்புகளும், ஆராய்ச்சி கூடங்களும் தேவையே இல்லை என்பதை பாகிஸ்தான் பாப்கான் வியாபாரி நிரூபித்துள்ளார்.பாகிஸ்தானின் தபூர் கிராமத்தை சேர்ந்த முகமது பயாஸ் (32). பெரிதாக படிக்கவில்லை. பாப்கான் விற்பனை செய்து வந்தார். ஆனால், சாதனை படைக்க வேண்டும் என்ற துடிப்பு உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. விமானத்தை ஓட்டிபார்ப்பது  ஒரு வகை ஆசை என்றால், அதை உருவாக்குவது இன்னொரு ஆசை. இதில் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர் இவர்.தொடர் முயற்சி காரணமாக இவர் விமானத்தை தயாரித்துள்ளார். இந்த விமானத்தை ரோடு கட்டர் மிஷின் இன்ஜின், ஆட்டோ டயர் என தனக்கு கிடைத்த பொருட்களை வைத்துதான் உருவாக்கியுள்ளார். விமானத்தை உருவாக்க வேண்டும்  என்ற தாகம் இவருக்கு திடீரென ஏற்பட்டு விடவில்லை. பள்ளிச் சிறுவனாக இருந்தபோதே, விமானத்தில் பறக்க வேண்டும் என்பது இவரது தணியாத தாகம். 8ம் வகுப்பு படிக்கும்போது தந்தை இறந்து விட்டதால், பள்ளிப் படிப்பை நிறுத்த  வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. பின்பு, தாய் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு உதவியாக இருந்தார்.

 பகலில் பாப்கார்ன் விற்பது, இரவில் செக்யூரிடி வேலை என வயிற்றுப் பிழைப்புக்காக அதிக நேரத்தை செலவிட வேண்டியிருந்தது. இருப்பினும், விமான கனவு மட்டும் தணியவே இல்லை. இடைவிடாத முயற்சியோடு  பணம் சேர்த்தார்.  ₹50,000 கடன் வாங்கினார். சொந்தமாக இருந்த நிலத்தையும் விற்றார். இத்தனை தியாகத்துக்கு பிறகுதான் இவரது கனவு நனவாகியுள்ளது. தனது சாதனையை கிராம மக்களுக்கு அறிவிக்க, பாகிஸ்தான் தினமான மார்ச் 23ம் தேதியை தேர்வு செய்தார். அவர் சொந்த விமானத்தில்  பறக்கும் அதிசயத்தை காண, கைகளில் பாகிஸ்தான் தேசிய கொடியுடன் கிராம மக்கள்  கூடியிருந்தனர். சாலையை ரன்வே ஆக்கி, தனது குட்டி விமானத்தை நிறுத்தி வைத்திருந்தார். ஆனால், தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், லைசென்ஸ் இன்றி ‘பறக்க’ முயன்ற பயாசை கைது செய்தனர். ₹3,000 அபராதம் செலுத்தி விட்டுதான் வெளியில் வந்தார்.

 ஒரு முறை சோதனை ஒட்டத்தின்போது பயசின் விமானம் தரையில் இருந்து இரண்டரை அடி உயரத்தில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்ததாக நேரில் பார்த்த நண்பர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அது 3 கிலோ மீட்டர் வரை  பறந்ததாகவும் கூறினர்.
 தனது சாதனை பற்றி பயாஸ் கூறுகையில், ‘‘விமானத்தை தயாரிப்பது பற்றிய வீடியோ காட்சிகள்,  புளூபிரிண்ட் ஆகியவற்றை பார்த்துதான் இதை உருவாக்கினேன். ஆனால், அனுமதியின்றி விமானத்தில் பறக்க முயன்றதாக என்னை கைது  செய்து மோசமான கிரிமினல்களுடன் அடைத்தனர்’’ என்றார். ஆனால், இன்று விமானப்படை அதிகாரிகள் உட்பட அனைவரின் பாராட்டு மழையில் நனைந்து வரும் முகமது பயாஸ், சாதனை படைத்த பெருமையுடன் காணப்படுகிறார். பாகிஸ்தான் விமானப்படை இவரது தயாரிப்புக்கு அங்கீகாரம்  அளித்துள்ளது.


Tags : airplane popcorn businessman , Own airplane, popcorn, businessman
× RELATED பாலியல் வழக்கில் கைது...