×

ஐதராபாத் அணி வெளியேற்றம் சிஎஸ்கேவுடன் மோத கேப்பிடல்ஸ் தகுதி

விசாகப்பட்டினம்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் டி20 எலிமினேட்டர் ஆட்டத்தில், 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற  டெல்லி கேப்பிடல்ஸ் அணி குவாலிபயர்-2 ஆட்டத்தில் நாளை சென்னை அணியை சந்திக்கிறது.ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். சன்ரைசர்ஸ் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா, மார்டின் கப்தில்  களமிறங்கினர். சாஹா 8 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார். அதிரடியாக சிக்சர்களைப் பறக்கவிட்ட கப்தில் 36 ரன் எடுத்து (19 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) அமித் மிஷ்ரா சுழலில் கீமோ பால் வசம் கேட்ச் கொடுத்து  ஆட்டமிழந்தார். ஓரளவு தாக்குப்பிடித்த மணிஷ் பாண்டே 30 ரன் (36 பந்து, 3 பவுண்டரி), கேப்டன் வில்லியம்சன் 28 ரன் எடுத்து (27 பந்து, 2 பவுண்டரி) பெவிலியன் திரும்ப, ஐதராபாத் 15.5 ஓவரில் 111 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், விஜய் ஷங்கர் - முகமது நபி ஜோடி 5விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த போராடியது. இருவரும் இணைந்து 14 பந்தில் 36 ரன் சேர்த்தனர். விஜய் ஷங்கர் 25 ரன் (11 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி  போல்ட் வேகத்தில் அக்சர் பட்டேல் வசம் பிடிபட்டார்.கீமோ பால் வீசிய கடைசி ஓவரில் முகமது நபி 20 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), தீபக் ஹூடா (4 ரன், ரன் அவுட்), ரஷித் கான் (0) ஆகியோர் விக்கெட்டை பறிகொடுத்தனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்  இழப்புக்கு 162 ரன் குவித்தது. புவனேஷ்வர் குமார் (0), பாசில் தம்பி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் கீமோ பால் 3, இஷாந்த் ஷர்மா 2, அமித் மிஷ்ரா, போல்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 165  ரன் எடுத்து அபாரமாக வென்றது. பிரித்வி ஷா அதிகபட்சமாக 56 ரன்  (38 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். தவான் 17 ரன், ரிசப் பன்ட் 49 ரன் எடுத்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், கலீில் அகமது, ரஷீத்கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.ஐதராபாத் அணி தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில், இதே மைதானத்தில் நாளை நடைபெறும் குவாலிபயர்-2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும்  அணி 12ம் தேதி நடைபெறும் பைனலில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.




Tags : Hyderabad ,team exit , Hyderabad team , Capitol ,qualification, CKK
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!