×

மெட்ரோ ரயில் நிலையத்தில் நுழைய முயன்ற மர்மநபரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு: பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் பேட்டி

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் மர்ம பொருளுடன் நுழைய முயன்ற மர்ம நபரை பிடிக்க உதவி கமிஷனர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் சுனில்குமார் தெரிவித்தார். பெங்களூரு மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ஜிப்பா மற்றும் தாடியுடன் வந்த மர்ம நபர் ஒருவர், கருப்புநிற பேக்குடன் ரயில் நிலையத்திற்கு நுழைய முயன்றார். முன்னதாக மெட்டல் டிடெக்டரில் நுழையும்  போது, சிவப்பு நிற விளக்குடன் ஒலி எழுப்பியுள்ளது.  

அங்கிருந்த தனியார் செக்யூரிட்டி நிறுவன ஊழியர் அவரை சோதனை செய்தார். அப்போது அவரது சட்டைக்கு கீழ் மர்மபொருள் இருப்பது போன்று மெட்டல் டிடெக்டர் ஒலி எழுப்பியது. இதையடுத்து அவரது லக்கேஜை ஸ்கேனர் கருவியில் வைக்கும்படி ஊழியர் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அந்த நபர் ஒப்புகொள்ளவில்லை. மாறாக வந்த வழியாக வேகமாக திரும்பி சென்றார். இதனால் அதி்ர்ச்சி அடைந்த செக்யூரிட்டி நிறுவன ஊழியர்கள், உடனே  உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

சம்பவ இடத்திற்கு உதவி கமிஷனர் ரவி சென்ணன்னவர்  தலைமையிலான போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த சி.சி.டி.வி  கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் மர்ம நபர் வந்து சென்றது,  சிவப்பு விளக்கு எரிந்தது உள்பட பல்வேறு காட்சிகள் இடம் பெற்றிருந்தது.  அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து நகர போலீஸ் கமிஷனர் சுனில் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே தனிப்படை அமைத்து மர்ம நபரை தேட உத்தரவிட்டார். இது குறித்து நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ஜிப்பா அணிந்து வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை சோதனை செய்தபோது, உடமையில் மர்மபொருள் வைத்திருப்பது போன்று மெட்டல் டிடெக்டரில் சிவப்பு விளக்கு எரிந்தது.

இதனால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு நகரில்  தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த மர்ம நபரின் நடமாட்டம், அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது. போலீசார் முதற்கட்ட விசாரணையில் அவரை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.  

சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து, அவரை தேடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக உதவி போலீஸ் கமிஷனர் மகந்த்ரெட்டி தலைமையில் 20  போலீசார் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர பெங்களூரு ரயில், பஸ், விமான நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர பொதுமக்களிடம் இருந்து தகவலை பெற்று கொள்ள விரும்பியுள்ளோம். யாரேனும் மர்ம நபரை நேரில் பார்த்தால் உடனே அருகேயுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கும்படி கேட்டு கொள்கிறோம். இந்த மர்ம நபரின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பயப்படவேண்டிய தேவையில்லை. விரைவில் மர்ம நபர் கைது செய்யப்படுவார் என்று நகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் தெரிவித்தார்.

Tags : Metropolitans ,Sunil Kumar ,metro station ,interview ,Bengaluru , Metro Rail Station, Marine Capture, 3 Independent System
× RELATED நடிகருடன் போட்டோ எடுத்த வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை