×

3 பேரை காவலில் எடுத்து விசாரணை 25 குழந்தைகளை விற்றது அம்பலம்: நர்ஸ் பரபரப்பு வாக்குமூலம், கொல்லிமலையில் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் முகாம்

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில், நர்ஸ் உள்பட 3பேரை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், 25குழந்தைகளை விற்றதாக நர்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து சட்டவிரோதமாக ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, பள்ளிபாளையம் உள்ளிட்ட ஊர்களில் வசிக்கும் வசதிபடைத்த குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது சமீபத்தில் அம்பலமானது.

கொல்லிமலையில் உள்ள ஏழை பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை, குறைந்த விலைக்கு வாங்கி குழந்தைக்காக ஏங்கும், பணம் படைத்த பெற்றோர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட ராசிபுரம் நர்ஸ் உதவியாளர் அமுதவள்ளி குழந்தை வாங்க விரும்பிய ஒருவரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் 3 பெண் புரோக்கர்கள், 2 ஆண் புரோக்கர்கள் என 8 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை, தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை நடைபெறுவதாக புகார் அளித்த சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார், மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா, அவரது அலுவலக பணியாளர்கள் 3 பேர், கொல்லிமலையை சேர்ந்த 6 நர்ஸ்கள் என 11 பேரிடம் இதுவரை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்னர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமுதவள்ளி, டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகிய 3 பேரையும், 2 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க நேற்று சிபிசிஐடி போலீசாருக்கு, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி அனுமதி அளித்தார். இதையடுத்து, இவர்கள் 3 பேரிடமும், நேற்று முன்தினம் மாலை முதல் சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் பிருந்தா, சாரதா ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழுவினர், சேலத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அமுதவள்ளியிடம் இதுவரை எத்தனை குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது.

அந்த குழந்தைகளின் உண்மையான பெற்றோர் யார்? வளர்ப்பு பெற்றோர் யார்? போன்ற கேள்விகளை கேட்டனர். இதற்கு அமுதவள்ளி கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 குழந்தைகளை விற்பனை செய்துள்ளதாகவும், அதற்காக இரு தரப்பு பெற்றோர்களிடமும் பத்திரத்தில் எழுதி, கையெழுத்து வாங்கியதாகவும், யாரையும் கட்டாயப்படுத்தி குழந்தைகளை வாங்கி விற்பனை செய்யவில்லை எனவும் வாக்குமூலமாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

இதே போல, முருகேசனிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதில், அமுதவள்ளி,முருகேசன் இடையேயான பேரம் குறித்த தகவல்கள் வெளியானது. 25 குழந்தைகளை மட்டுமே விற்றதாக அமுதவள்ளி கூறியபோதும், கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கொல்லிமலை குழந்தைகள் சட்டவிரோதமாக தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதை கடந்த இரண்டு நாட்களாக கொல்லிமலை கிராமங்களில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வரும்,சிபிசிஐடி போலீசாரால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத குழந்தைகள் விற்பனைக்கு துணையாக இருந்த பல நர்ஸ்கள், நர்ஸ் உதவியாளர்கள் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்களை அழைத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதன் காரணமாக,கொல்லிமலைக்கு அமுதவள்ளியை அழைத்து சென்று,விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கொல்லிமலையில் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து நேற்று 2வது நாளாக சிபிசிஐடி போலீசாரின் ஒரு பிரிவினர் விசாரணை நடத்தினர். அப்போது கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த 2 ஆண்டுகளில் அளிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ், பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறித்தும், குழந்தைகளை விற்பனை செய்த பெற்றோர்களிடமும் விசாரணை நடைபெற்றது.

அப்போது குழந்தைகளை விற்ற பெற்றோர்,ஒரு குழந்தைக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை தான் கிடைத்தது என கூறியுள்ளனர். சட்டவிரோதமாக நடைபெற்ற குழந்தைகள் விற்பனையை அப்பகுதி மக்கள் மிக இயல்பாக கூறியதைகேட்டு,சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற சட்டவிரோத குழந்தைகள் விற்பனை வழக்கில் 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கைதான நர்ஸ் அமுதவள்ளி, கணவர் ரவிச்சந்திரன், புரோக்கர்கள் பர்வீன், லீலா, கஷினா ஆகிய 5 பேர் சார்பில் ஜாமீன் கேட்டு, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி இளவழகன், 5பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Investigators ,children ,police camp , 3 persons, police, investigation, 25 children, sold out, nurse, confession, CBCID police, camp
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்