×

பாஜ-மஜத முக்கிய தலைவர்கள் திடீர் சந்திப்பு : கர்நாடக அரசியலில் பரபரப்பு

பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மாநிலத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்த்துவரும் நிலையில் மஜத மாநில தலைவர் எச். விஸ்வநாத் மற்றும் பாஜவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி. சீனிவாஸ் ஆகியோர் சந்தித்துக்கொண்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மஜதவை சேர்ந்த குமாரசாமி முதல்வரானார். இதை தொடர்ந்து இரு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாயினர். இதன் பின்னர் இரு கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் வார்த்தை கனைகளை வீசி தாக்கி விமர்சனம் செய்துவந்தனர். இதனால் கூட்டணி ஆட்சி நிலைக்குமா என்ற கேள்வியும் எழுந்து வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மஜத-காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் செய்திருந்தாலும், கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் தாக்கி குற்றம் சாட்டிவந்தனர். இதன் இடையே நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் மஜத-காங்கிரஸ் கூட்டணி நிலைக்காது என பலரும் பரவலாக பேசிவரும் நிலையில் எதிரிகளாகவே கருதப்பட்டு வந்த பாஜவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி. சீனிவாஸ் பிரசாத் மற்றும் மஜதவை சேர்ந்த அதன் மாநில தலைவர் எச். விஸ்வநாத் ஆகியோர் சந்தித்து கொண்டது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஜத மாநில தலைவர் எச். விஸ்வநாத் நேற்று மைசூரு, ஜெயலட்சுமி புரம் பகுதியில் உள்ள சீனிவாஸ்பிரசாத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது.

மைசூருவில் பிரபலமான இந்த இரு தலைவர்கள் சந்தித்தது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்புக்குழு தலைவராக உள்ள சித்தராமையாவே முதல்வராக வரவேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கருத்துதெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினரின் இந்த அறிவிப்பே இரு தலைவர்களின் சந்திப்புக்கு முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், மஜதவுக்கு அளித்துவரும் ஆதரவை காங்கிரசார் திரும்பப்பெறுவது குறித்து காய்நகர்த்திவருவதும்,  சட்டப்ேபரவையை கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொள்ள காங்கிரசார் முயற்சிக்கும் பட்சத்தில், அதை தடுப்பது குறித்து எச். விஸ்வநாத் மற்றும் சீனிவாஸ்பிரசாத் ஆகிய இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் மைசூர் நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மஜத மாநில தலைவர் எச். விஸ்வநாத் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பிரபல தலைவர்களான முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர் ஜி.டி. தேவகவுடா ஆகிய இருவரும் மைசூரு நாடாளுமன்ற தொகுதியில் 3 நாட்கள் மட்டுமே கூட்டாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.  மேலும், சித்தராமையா மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியை அமைச்சர் ஜி.டி. தேவகவுடா இன்னும் மறக்கவில்லை என்றும், இதனால் தான் மைசூரு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ஜி.டி. தேவகவுடா முழுமையாக பிரசாரத்தில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. மண்டியாவில் மஜத வேட்பாளருக்கு காங்கிரசார் வாக்களிக்கவில்லை என்பதால், மைசூருவில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மஜதவினர் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு, மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே விரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : leaders ,Bhajan-Majatha ,Karnataka , BJD-Major Leaders Sudden Meeting, Carnatic politics
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...