×

விஐபி வேட்பாளர் போட்டியிடும் வடகிழக்கு டெல்லி யாருக்கு? : மும்முனை போட்டியால் விறுவிறுப்பு

புதுடெல்லி: விஐபி வேட்பாளர்களிடையே கடுமையான போட்டி நிலவுவதால், தொகுதியை கைப்பற்றப் போவது யார்? என வடகிழக்கு டெல்லி பிரசாரத்தில் அதீத ஆர்வம் எழுந்துள்ளது. டெல்லியில் 7 தொகுதிகளையும் கடந்த பொது தேர்தலில் பாஜ கைப்பற்றியது. எனவே, தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது. அதோடு, தொகுதியில் ஜெயித்த பாஜ மாநில தலைவர் மனோஜ் திவாரி, மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். ஜெயிப்பது உறுதி என அவர் நம்பிக்கையாக உள்ளார். காங்கிரஸ் தரப்பிலும் மாநில தலைவர் ஷீலா தீட்சித் களமிறங்கி உள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில், டெல்லி மாநிலத்தில் முதல் முறையாக போட்டியிட்ட தொகுதி என்ற நம்பிக்கையில் மக்கள் தன்னை கைவிட மாட்டார்கள் எனும் ஆர்வத்துடன் அவர் அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆம் ஆத்மி கட்சியில், டெல்லி மாநில முன்னாள் பொறுப்பாளர் திலீப் பாண்டே அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். ஆக, மாநிலத்தின் தலைவர், பொறுப்பாளர்களாக இருந்த காங்கிரஸ், பாஜ, ஆம் ஆத்மி கட்சியின் விஐபிக்கள் களத்தில் உள்ளதால், வெற்றி யாருக்கு எனும் ஆர்வம் தொகுதியில் பெருகி உள்ளது.

இதனிடையே, தொகுதியில் குடிசை வீடுகளுக்கு கான்கிரீட் வீடு மாற்று ஏற்பாடாக செய்து தரப்படும் என்கிறார் பாஜ வேட்பாளர் திவாரி. யமுனை ஆற்றுப்படுகையை தூய்மை செய்யும் பணிகளை ஏற்கனவே தொகுதியில் தொடங்கி உள்ளேன். புராரிக்கு மெட்ரோ கொண்டு வரும் நடவடிக்கையும் சுறுசுறுப்பாகி உள்ளது. சாலை போக்குவரத்து சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று திவாரி வாக்குறுதிகளை அடுக்கி உள்ளார். திவாரிக்கு பக்கபலம் சேர்ப்பது அவர் சார்ந்த பூர்வாஞ்சலி இனத்தினரின் வாக்கு வங்கி தான். தன்னை ஒரு போதும் கைவிட மாட்டார்கள் என்பது அவரது எண்ணம். உத்தரப்பிரதேசம், பீகார் மாநில பூர்வாஞ்சலி இனத்தினர் கணிசமான எண்ணிக்கையில் உள்ள தொகுதி. அவர்களுக்கு இணையாக முஸ்தபாபாத், சீலாம்புர், கோண்டா பகுதிகளில் முஸ்லிம் வாக்குவங்கியும் (23%) உள்ளது. வெற்றி வேட்பாளரை நிர்ணயிப்பதில் இந்த இரு இனத்தினரின் பங்களிப்பு தொகுதியில் அதிகமாகும். சட்டப்பேரவையின் 10 தொகுதிகளை உள்ளடக்கிய வடகிழக்கு மக்களவை தொகுதியில் 270 அங்கீகாரமற்ற காலனிகள், 48 சேரிகள் உள்ளன. அங்கீகாரமற்ற காலனிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், புதிதாக சாலை வசதிகள், தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு போன்றவை தொகுதி மக்களின் முக்கிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
கல்வி, சுகாதாரம், மின்சாரம், தண்ணீர் வசதிகள் ஆம் ஆத்மி ஆட்சியில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதையும் மக்கள் அங்கு பேசி வருகின்றனர்.

ஷீலா தீட்சித் உறுதி

தொகுதியில்  குண்டு, குழியுமாக சாலை பராமரிப்பு படுமோசம் என சாடுகிறார் காங்கிரஸ்  வேட்பாளர் ஷீலா தீட்சித். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கெஜ்ரிவால்  அரசு மீது வாக்காளர்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், 15 ஆண்டு கால  முதல்வராக இருந்த தன் மீதும், காங்கிரஸ் ஆட்சியின் மீதும் நம்பிக்கை வைத்து  ஜெயிக்க வைப்பார்கள் எனவும் ஷீலா உறுதி தெரிவித்து உள்ளார். புதிது  புதிதாக வீடுகளும், கடைகளும் முளைத்தபோது, கண்ணை மூடிக்கொண்டு  இருந்துவிட்டு, பிறகு சட்டவிரோதம் என நடவடிக்கை எடுப்பது நியாயமில்லாதது.  மக்களின் தேவைக்கேற்ப, வசதி மற்றும் விரிவாக்கத்தை நாம் செய்து தரவேண்டும்.  மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன் என ஷீலா தெரிவிக்கிறார்.

திலீப் பாண்டே முழக்கம்

ஒரு தொகுதியில் மட்டும் தன்னை ஜெயிக்க வைக்காமல், மாநிலத்துக்கு முழு அந்தஸ்து கோஷத்துடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியை அனைத்து தொகுதியிலும் ஜெயிக்க வைக்க வேண்டும் என வாக்காளர்களை திலீப் பாண்டே வேண்டிக் கொண்டுள்ளார். முழு அந்தஸ்து கிடைத்தால், மக்கள் எதிர் நோக்கும் அனைத்து பிரச்னைகளும் தானாக, தீர்ந்துவிடும் என பிரசாரத்தில் அவர் முழங்கி வருகிறார்.ஆக, ஜெயிப்பது உறுதி என 3 பேரும் அதீத நம்பிக்கையில் இருப்பதால், பிரசாரம் அங்கு விறுவிறுப்பாகி உள்ளது.

Tags : candidate ,VIP candidate ,North East , Who is the North East candidate ,VIP candidate contesting?
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்