×

மதுரை கோட்டத்தில் கோடை கால ரயில்கள் மாற்றத்தால் பயணிகள் திண்டாட்டம்: விடுமுறையில் வெளியிடங்களுக்கு செல்வோர் திணறல்

நெல்லை: மதுரை கோட்டத்தில் சில இடங்களில் நடக்கும் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பயணிகளை பாதிப்பதாக உள்ளது. கோடை விடுமுறையில் சுற்றுலா மற்றும் வெளியிடங்களுக்கு செல்வோர் ரத்து செய்யப்படும் ரயில்களால் திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மதுரை கோட்டத்தில் சில இடங்களில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக  இம்மாதம் முழுவதும் ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில்(எண்.16340), சென்னை எழும்பூர் - தூத்துக்குடி வாராந்திர விரைவு ரயில், மைசூர் -தூத்துக்குடி விரைவு ரயில்(எண்.16236) உள்ளிட்ட ரயில்கள் குறிப்பிட்ட ரயில்நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு காலதாமதமாக செல்கின்றன. மேலும் மைசூர்- தூத்துக்குடி ரயிலுக்கு நெல்லைக்கான இணைப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடு -திருச்செந்தூர் பயணிகள் ரயில்(எண்.56769) கடந்த 3ம் தேதி தொடங்கி மே மாதம் முடிய திண்டுக்கல் - நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையே இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் செவ்வாய், வெள்ளி தினங்களில் நெல்லை- மதுரை இடையே இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை கொண்டாடும் பலரும் மதுரை, பழனி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு செல்வது வழக்கம். இதுபோல் அங்குள்ளவர்களும் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருவது உண்டு. இந்நிலையில் அந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நெல்லை, தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோரும் தற்போது அந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கேரள சுற்றுலாவுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதுபோல் நெல்லை- மயிலாடுதுறை ரயிலும் திருச்சி- திண்டுக்கல் இடையே குறிப்பிட்ட தினங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில்- கோவை பயணிகள் ரயிலும் குறிப்பிட்ட தினங்களில் மதுரை- திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘கோடை விடுமுறையில் வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்வோர் பெரும்பாலும் ரயில்களை அதிகம் விரும்புவர். நெல்லை மக்களை பொறுத்தவரை கேரள பகுதிகளுக்கும், தமிழகத்தில் உள்ள ஆன்மீக தலங்களுக்கும் அதிகளவில் சுற்றுலா செல்கின்றனர். ஆனால் மே மாதத்தில் பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி தெற்கு ரயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளது. அதிலும் பாசஞ்சர் ரயில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடங்கி, மும்பை எக்ஸ்பிரஸ், குருவாயூர் உள்ளிட்ட பல ரயில்கள் ஒரு மணி நேரம் வரை சில ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

மதுரை கோட்டத்தில் கோடை விடுமுறை காலங்களில் பராமரிப்பு பணிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மற்ற மாதங்களில் கூட பராமரிப்பு பணிகள் நடப்பதாக அறிவிக்கின்றனர். குறிப்பிட்டு சொன்னால் திருச்செந்தூர்- பாலக்காடு பயணிகள் ரயில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 தினங்கள் வரை குறிப்பிட்ட பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. நெல்லை- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலும் இதே பிரச்னையை எதிர்கொள்கிறது. பயணிகள் நலன் கருதி கோடை விடுமுறை காலங்களில் பராமரிப்பு பணிகள் நடத்துவதை மதுரை கோட்டம் கைவிட வேண்டும்.’’ என்றனர்.

Tags : Passenger breakdown ,summer break ,Madurai , Madurai Division, Summer Trains
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...