×

சொத்துகள் கைக்கு வந்ததும் துரத்திவிட்ட பரிதாபம்: மகன்கள் விரட்டி விட்டதால் முதியவர் கலெக்டரிடம் கண்ணீர்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி கோவிந்தராஜ் (65). இவரது மனைவி  மேகலா  உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட்டார்.  கோவிந்தராஜுக்கு உதயகுமார், மணிகண்டன், ரமேஷ் ஆகிய  3 மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜ் பல லட்சம் மதிப்புள்ள  தனது 8 ஏக்கர் நிலத்தையும் 3 மகன்களுக்கும் பாகப்பிரிவினை செய்து கொடுத்து விட்டார். சொத்துக்கள் தங்கள் கைக்கு வந்து சேர்ந்ததும் 3 மகன்களும் தந்தையை கைவிட்டு விட்டனர். வீட்டிலும் இருக்க விடவில்லை. சோறு இல்லாமல் வீட்டில் பட்டினி கிடந்த கோவிந்தராஜ் வீட்டை விட்டு வெளியேறி  நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் என்று  பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து அங்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காசு, உணவில் உயிர் வாழ்ந்தார்.

3 மகன்கள் இருந்தபோதும் தனது நிலை இப்படியாகிவிட்டதே என வருந்திய கோவிந்தராஜ் கடந்த திங்கட்கிழமை திருவாரூர் கலெக்டர் அலுவலகம் வந்தார். வெகுநேரமாக அவர் கலெக்டர் அலுவலகத்தில் நின்றிருந்ததை அறிந்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது தனது நிலையை தெரிவித்தார். உடனடியாக அவரை கலெக்டரை சந்திக்க அழைத்து சென்றனர்.  அவர் கலெக்டர் ஆனந்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் தனது சொத்துக்களை பறித்துக்கொண்ட 3 மகன்களும் தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாக தெரிவித்தார். இதை அறிந்த கலெக்டர் இது குறித்து 3 மகன்களையும் அழைத்து விசாரித்து கோவிந்தராஜை கவனிக்க நடவடிக்கை எடுக்கும்படி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

Tags : sons ,collector , Assets, sons, and elderly
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி