×

குமரியில் ஓகி புயலால் சின்னா பின்னமான பள்ளி கட்டிடங்களுக்கு விடிவு காலம் உண்டா? ஒன்றரை ஆண்டுகளாகியும் ஒண்ணுமே நடக்கல...

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஓகி புயலுக்கு சின்னா பின்னமான பள்ளி கட்டிடங்கள் ஒன்றரை ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படவில்லை. ஆகவே விரைவாக சீமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி ஓகி புயல் தாக்கியது. இந்த மாவட்டத்தில் சுனாமிக்கு பின்,  மிகப்பெரிய பேரழிவை ஓகி உண்டாக்கியது. ஏராளமான உயிர்கள் பலியாகின. லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் ஆறாத வடுக்களாக உள்ளன. ஓகியால் சேதமடைந்த கட்டிடங்களை கூட இன்னும் முழுமையாக சீரமைக்க முடிய வில்லை.

அந்த வகையில் நாகர்கோவில் வல்லன்குமாரன்விளை அரசு பள்ளி கட்டிடமும் இன்னும் இடிந்த நிலையில் தான் உள்ளன. ஓகி புயலின் போது இந்த பள்ளி வகுப்பறைகளின் கட்டிங்களின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. இந்த இடிபாடுகள் கூட அகற்றப்படவில்லை. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். போதிய வகுப்பறைகள் இல்லாமல் நெருக்கடியான நிலையில் தான் ஓராண்டு வகுப்புகள் நடந்து முடிந்துள்ளன.  ஜூன் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். தங்கள் பள்ளியில் கட்டிடம் இடிந்த நிலையில் கிடக்கிறது என்றும், பள்ளி கட்டிடத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தமிழக கல்வித்துறைக்கு கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் அரசு பள்ளி என்றாலே அலட்சியம் என்பதற்கேற்ப, இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அரசு முன் வரவில்லை.

கல்வித்துறை சார்பில் சிறப்பு நிதி பெற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் தோல்வியில்  முடிந்தன. இதன் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இடிந்த நிலையில், ஓகியின் கோர தாண்டவத்தை நினைவுப்படுத்திக் கொண்டே கட்டிடம் இருக்கிறது. இதே போல் நாகர்கோவில் டென்னிசன் ரோட்டில் உள்ள வட்டார வள கல்வி அலுவலகத்தின் கட்டிடமும் ஓகியால் சேதம் அடைந்தது.  பல்வேறு பள்ளிகளின் ஆவணங்கள் இந்த அலுவலகத்தில் தான் உள்ளன. இவற்றை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இடலாக்குடி சதாவதானி மேல்நிலைப்பள்ளி கட்டிடமும் இன்னும் சீரமைக்கப்பட வில்லை. இங்கும் ஓகியால் இடிந்து விழுந்த பள்ளி கட்டிடங்கள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன. கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் பள்ளி கட்டிடங்கள் பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆனால் இந்த நிதியை கொண்டு பள்ளிக்கு சுண்ணாம்பு வாங்கி வெள்ளை அடிக்க கூட முடியாது. சிறிய அளவிலான பராமரிப்பு பணிகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் இடிபாடுகளை அகற்றுவதற்கே ஒரு பெரிய தொகை ஆகும். எனவே அரசு, முன் வந்து இந்த கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும். ஓகி தாக்குதலின் 2வது ஆண்டு தினத்துக்குள், இடிந்து போன கட்டிடங்களுக்கு விடிவு காலம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் கூறி உள்ளனர்.


Tags : school buildings ,china ,Kumari ,half , Kumari, okay storm
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன