×

விபத்துக்குள்ளான மாற்றுத்திறனாளியிடம் புகாரை வாங்காமல் அலைக்கழிப்பு: அண்ணாநகர் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னை: விபத்துக்குள்ளான மாற்றுத்திறனாளியிடம் புகாரை வாங்காமல் அலைக்கழித்த விவகாரத்தில் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஷனாய் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான அந்தோணி, தனது மனைவியுடன் மக்கள் கூடும் இடங்களில் பாடல்கள் பாடி யாகசம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதியன்று, பூந்தமல்லி-கீழ்ப்பாக்கம் நெடுஞ்சாலையில் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில் அந்தோணியின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மீது மாநகர அரசு பேருந்து மோதியதாக தெரிகிறது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தோணிக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர். வழக்குப்பதிவு செய்யவில்லை என அந்தோணி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, அந்தோணி மீது மோதிய வாகனம் பற்றி அடையாளம் தெரியாததால் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை என்று கூறினர். அடையாளம் தெரியாத வாகனம் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடலாமே என்ற கேள்விக்கு காவல்துறை தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, தன் மீது அரசு பேருந்து மோதி கை செயலிழந்து போனதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மறுத்து காவல்துறையினர் 40 நாட்களாக அலையவிடுவதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி அந்தோணி கண்ணீர் மல்க நேற்று புகார் தெரிவித்தார். இந்த நிலையில், அந்தோணியின் புகார் மீது விசாரணை நடத்திய காவல் ஆணையர் ஏ.கே.விஷ்வநாதன், அலட்சியமாக செயல்படுதல் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியை அலைக்கழித்தல் ஆகிய காரணங்களால், அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு உதவி ஆய்வாளர் மோகன்-ஐ பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, மாற்றுத்திறனாளி அந்தோணியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : Dismissal ,Assistant Inspector ,Annanagar , Handicapped, accident, Anna Nagar, Inspector, suspended
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது