கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கலில் இருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கை நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில இருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவரான கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த நிலையில் இருவரும் கோயிலுக்கு சென்றபோது 2015 ஜூன் 23ம் தேதி மாயமானார். இதுதொடர்பாக திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் 2015 ஜூன் 24ம் தேதி கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கோகுல்ராஜ் பிணமாக கிடந்தார். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கொலை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த வீடியோ ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கு நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கோகுல்ராஜ் வழக்கை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி கோல்ராஜின் தாயார் சித்ரா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜின் ஆதரவாளர்கள் மிரட்டலால், அரசுத்தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர் என்பதால் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற அவர் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கு குறித்து நாமக்கல் சிபிசிஐடி பிரிவு, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இந்த நிலையில் இந்த வழக்கானது நீதிபதி கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மதுரை சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை 4 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


× RELATED லால்குடி அருகே டாஸ்மாக் காவலாளி கொலை வழக்கில் 3 வாலிபர் கைது