×

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் தரப்பில் மனுத்தாக்கல்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் புகார் வழக்கில் திருநாவாக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுக்களுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி இருவரின் தாயாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்து திருநாவுக்கரசுவின் தாயார் லதா, சபரிராஜனனின் தாயார் பரிமளா ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களில், பாலியல் வன்கொடுமை வழக்கை அதற்குரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்ட உத்தரவு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், குண்டர் சட்ட உத்தரவு குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்யவும், நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கானது விடுமுறைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.


Tags : Pollachi ,sex criminals , Spanking law, Pollachi Case, Tamilnadu Government, Court
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!