×

ஜாமீன் கால அவகாசம் முடிந்தது: சிறைக்கு மீண்டும் திரும்பினார் நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: நிரந்தர ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சிறைக்கு திரும்பினார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இருதய நோய், நீரிழிவு நோயால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதனை சுட்டிக்காட்டி நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள்,கடந்த மார்ச் 26-ம் தேதியன்று நவாஸ் ஷெரீப் சிகிச்சை பெறுவதற்காக 6 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கினர்.பாகிஸ்தானுக்குள் எந்த பகுதியிலும் மருத்துவ சிகிச்சை பெறலாம், ஆனால், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாமீன் உத்தரவு லாகூர் சிறை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது.

இந்த ஜாமீன் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது இதனை தொடர்ந்து மீண்டும் சிறைக்கு திரும்பினார். அவரை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினர் வீட்டில் இருந்து பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர். பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பட்டாசு மற்றும் வாண வேடிக்கை நடத்தப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : Nawaz Sharif ,prison , Bail, Jail, Nawab Sharif
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்