×

சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடைகோரி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

சென்னை:  சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடைகோரி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே, எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் தொடர்ந்த வழக்கில் சபாநாயகரின் நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

சபாநாயகர் தனபால் 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்


அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏக்களானவர்கள் கலைச்செல்வன் (விருத்தாசலம் தொகுதி), ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி). இந்த 3 எம்எல்ஏக்களும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதைத்  தொடர்ந்து 3 எம்எல்ஏக்களும் அதிமுகவுக்கு எதிராகவும் கட்சி விரோத செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார். இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் கடந்த 30ம் தேதி விளக்கம் கேட்டு 3 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சபாநாயகர் கூறியிருந்தார்.

சபாநாயகரின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை

சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகரின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டனர்.இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடராத கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சார்பில் அவரின் வழக்கறிஞர் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். சபாநாயகர் விதித்த கெடு 9ம் தேதியுடன் முடிகிறது.  உச்ச நீதிமன்றம் விதித்த தடை தனக்கு பொருந்துமா, பொருந்தாத பட்சத்தில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.

இதனால் அவருக்கு கால  அவகாசம் வழங்கப்படுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. விளக்கம் அளிக்காத பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. .இதற்கிடையே சபாநாயகரின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை எம்எல்ஏ பிரபுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலகம் தரப்பில் கேட்கப்பட்ட போது, “உச்ச நீதிமன்றம் விதித்த தடை 3 எம்எல்ஏக்களுக்கும் பொருந்தும். அதனால், எம்எல்ஏ பிரபு விளக்கம் அளிக்க தேவையில்லை’’ என்றனர்.

எம்.எல்.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு

இந்நிலையில் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு தடைகோரி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் பிரபு குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நோட்டீஸ் தொடர்பான ஆவணங்களை பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA ,Prabhu ,Supreme Court , Speaker Dhanapal, Kallakurichi, MLA, Prabhu, Supreme Court, petition
× RELATED வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை...