×

குடிநீர் சப்ளையில் தனிநபர் தலையீட்டை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை: கருப்பூரில் பொதுமக்கள் போராட்டம்

ஓமலூர்: கருப்பூர் பகுதியில் குடிநீர் சப்ளையில் தனிநபர் தலையீட்டை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் கருப்பூர் பேரூட்சி அலுவலகம் முன் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சமூக ஆர்வலர் சுசீந்திரகுமார் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பூரில் கிடப்பில் போடப்பட்ட திட்டப்பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. அனைத்து வார்டுகளிலும் உள்ள குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். மயான ஆக்கிரமிப்பை அகற்றி நந்தவனம் அமைக்க வேண்டும். ஏரி-குளங்களின் ஆக்கிரமிப்புகள், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்தை காக்க வேண்டும். பொது கழிவறைகள் தண்ணீர் இல்லாமல் பூட்டி கிடக்கிறது. அவற்றிற்கு தண்ணீர் வசதி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பேரூராட்சி அலுவலகம் எதிரிலேயே கோழி கழிவுகளை போட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர். அதனால், விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பேரூராட்சி அலுவலகம் முன்பாகவே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழி கடையை அகற்ற வேண்டும்.

கருப்பூர் சந்தையில் மிகமிக அதிகமாக சுங்கம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். சந்தை ஆக்கிரமிப்புகள் குறித்து வரும் 24ம் தேதி கூட்டம் கூட்டி கலந்து பேச வேண்டும். 7வது வார்டில் கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும். 1வது வார்டில் தனிநபர் தலையீடுகளை தவிர்த்து முறையாக தண்ணீர் வழங்க வேண்டும். அதிகரித்துள்ள வீட்டுவரி, குடிநீர் வரி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். வார்டு அளவிலான வரைவு திட்டம் முற்றிலும் தவறாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாக்களர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து மக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை அழைத்து கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேரூராட்சி அலுவலர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடனடியாக சரி செய்ய வேண்டிய பணிகளை செய்து கொடுப்பதாக உறுதி கூறினர். மேலும், இதர பணிகளை வரும் 24ம் தேதி பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Siege ,Panchayat Office ,protest ,Karup , Karupur, drinking water
× RELATED கீழ வெள்ளகால் ஊராட்சி அலுவலக புதிய...