×

வன்முறை மற்றும் முறைகேடுகள் எதிரொலி..: திரிபுராவில் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: வன்முறை மற்றும் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளதால், திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியின் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டபோது திரிபுரா மாநிலத்தில் மேற்கு பாராளுமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் சராசரியாக 81 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், வாக்குப்பதிவின் போது தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், ஆளுங்கட்சி பிரமுகர்கள் வாக்குப்பதிவு மையங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும், போலி வாக்குகளை பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, காங்கிரஸ் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த ஏப்ரல் 19ம் தேதியன்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில், திரிபுரா மேற்கு மக்களவை தொகுதிகான வாக்குப்பதிவு 1679 வாக்குப்பதிவு மையங்களில் நடைப்பெற்றது. இதில் 460க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் ஆளும்கட்சியினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, போலி வாக்குகளை பதிவு செய்ததாகவும், வாக்காளர்களை அடித்து விரட்டியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரையடுத்து, இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விசாரித்து, அறிக்கை பெற்றது. அதன்படி அந்த பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட  26 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து, இந்த 168 வாக்குச்சாவடிகளிலும் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அங்கு வரும் 12ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : polling booths ,Election Commission ,Tripura , Tripura, Lok Sabha polls, abuse, repolling,election commission
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடும்...