×

மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை அவசர சிகிச்சைப்பிரிவில் 3 நோயாளிகள் பலி: வென்டிலேட்டர் இயங்காததால் மூச்சுத்திணறல் என புகார்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 3 நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர். வென்டிலேட்டருக்கு மின்சப்ளை இல்லாததால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதற்கு மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியப்போக்குதான் காரணம் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அரசு மருத்துவமனையில் விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு வென்டிலேட்டர் வசதியுடன் 15 படுக்கைகள் உள்ளன. நேற்று மாலை 6 மணிக்கு மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால் நகர் முழுவதும் இருள் சூழ்ந்தது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகே மீண்டும் மின்சாரம் வந்தது. இந்நிலையில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர், மின் சப்ளை இல்லாததால் இயங்கவில்லை. இதனால் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

 இதில், மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்த மல்லிகா (55), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள் (60), விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் (52) ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து 5 நிமிடங்களில் பலியாகினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கதறி அழுதபடி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அங்கிருந்த டாக்டர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே உயிருக்கு போராடிய மற்ற நோயாளிகளை காப்பாற்ற பேட்டரிகள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் உடனடியாக வென்டிலேட்டர் இயக்கப்பட்டதால், சிகிச்சையில் இருந்த மற்றவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் அறிந்து மருத்துவனைக்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன், அரசு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா, நிலைய மருத்துவ அதிகாரி ஸ்ரீலதா, துறை தலைவர் டாக்டர் செய்யது ஆகியோர், உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  இதனிடையே பலியான பழனியம்மாள, மல்லிகா, ரவீந்திரன் ஆகியோர் உடல்கள், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
 ஆனால், அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில், ‘‘நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீர் மின் தடை ஏற்பட்டது. உடனடியாக நாங்கள் பேட்டரியை இயக்கி, இயங்காமல் போன வென்டிலேட்டரை சீரமைத்தோம். சுவாசக்கருவி இயங்காமல் போனதால், யாரும் இறக்கவில்லை. ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளில் இருந்து மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் தான் இறந்திருக்கிறார்கள்’’ என்றார்.

அதிகாரிகள் அலட்சியம்: உறவினர்கள் குற்றச்சாட்டுஇறந்த மல்லிகாவின் உறவினர்கள் கூறுகையில், ‘‘மின் தடை ஏற்பட்டதுமே சிகிச்சையில் இருந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து எங்களது உறவினர் மல்லிகா உள்பட 3 பேர் இறந்து விட்டனர். மருத்துவமனை நிர்வாகம் இரக்கமின்றி தவறாக சொல்கிறார்கள். மின் சப்ளை இல்லாத நேரத்தில் வெண்டிலேட்டர் இயங்க மாற்று ஏற்பாடு எதுவுமே செய்யவில்லை. அதிகாரிகளின் அஜாக்கிரதைதான் மூன்று பேர் உயிரை பறித்து விட்டது. இது பற்றி உடனே உரிய விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மையான நிலவரம் மக்களுக்கு தெரியவரும். நாங்கள் உறவினர்களை இழந்தது போல் வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களால் யாரும் பலியாக கூடாது’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : emergency hospital ,Madurai ,state hospital , Madurai, Government Hospital, complaining,ventilator ,functioning
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...