×

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு நர்ஸ் உள்பட 3 பேரை 2 நாட்கள் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி: நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில், நர்ஸ் உள்பட 3 பேரை 2நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நாமக்கல் கோர்ட் அனுமதி வழங்கியது. இதையடுத்து 3பேரையும் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது சமீபத்தில் அம்பலமானது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி ராஜாசீனிவாசன், சேலம் டிஎஸ்பி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர், 8 சப் இன்ஸ்பெக்டர்கள் இந்த விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 5 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொல்லிமலையில் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து நேற்று 2வது நாளாக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சாரதா விசாரணை நடத்தினார். அப்போது கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளில் அளிக்கப்பட்ட பிறப்புச்சான்றிதழ், பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து அவர் விசாரணை நடத்தினார். மேலும் கொல்லிமலையில் குழந்தைகளை விற்பனை செய்த பெற்றோர்களிடமும் விசாரணை நடைபெற்றது. அப்போது அவர்கள் ஒரு குழந்தைக்கு ₹40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை கிடைத்தது என கூறினர். இதே போல நாமக்கல்லில் டிஎஸ்பி ராஜாசீனிவாசன் தலைமையிலான போலீசார், கொல்லிமலை பகுதியில் உள்ள துணை சுகாதார நிலைய நர்ஸ்கள் 3 பேரை அழைத்து 2 மணி நேரம் விசாரித்தனர். அப்போது, கடந்த இரு ஆண்டுகளில் கொல்லிமலையில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக எதாவது புகார்கள் வந்ததா? என விசாரித்தனர்.

இதற்கிடையில் டிஎஸ்பி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பிருந்தா ஆகியோர் நேற்று இந்த வழக்கில், கைதாகி சேலம் மத்திய சிறையில் உள்ள நர்ஸ் உதவியாளர் அமுதவள்ளி, கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகிய 3 பேரை, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுதிக்கக்கோரி நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி போலீசார்,  சேலம் மத்திய சிறையில் இருந்த 3 பேரையும் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மனுவை  விசாரித்த நீதிபதி 3 பேரையும் 2 நாட்கள் காவலில் வைத்து  விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். நாளை மாலை  6 மணிக்கு 3 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் ரகசிய இடத்திற்கு சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons ,RCC ,CBCIT ,Namakkal ,children ,nurses , Razipuram Children's, 3 nurses, Permission , CBCIT , Namakkal, court orders
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...