8 லட்சம் மாணவ-மாணவியர் எழுதிய பிளஸ் 1 தேர்வு முடிவு இன்று வெளியீடு : அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிடுகிறது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான ெபாதுத்தேர்வு கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடந்தது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7,218 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ, மாணவியர்  தேர்வு எழுதியுள்ளனர். தனித்தேர்வர்களாக 5 ஆயிரத்து 32 பேர் எழுதினர். மொத்தமாக 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வை எழுதியுள்ளனர்.பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோரில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 693 பேர் மாணவியர். 3 லட்சத்து 74 ஆயிரத்து 925 பேர் மாணவர்கள்.  மாணவர்களை விட 66 ஆயிரத்து 768 மாணவியர் கூடுதலாக இந்த ஆண்டு எழுதியுள்ளனர். இவர்களில்  அறிவியல் பாடப் பிரிவின் கீழ் 4 லட்சத்து 65 ஆயிரத்து 313, வணிகவியல் பாடப்பிரிவின் கீழ் 2 லட்சத்து 79 ஆயிரத்து 859, கலைப் பிரிவின்கீழ் 15 ஆயிரத்து 346 மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர்.இந்நிலையில், கடந்த 2018 மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 தேர்வு எழுதி தோல்வி அடைந்து, தற்போது பிளஸ்2 வகுப்பில் படிக்கும் 84 ஆயிரத்து 332 பள்ளி மாணவ, மாணவியர் கடந்த ஆண்டு நடைமுறையில் இருந்த பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு  எழுதினர். அதேபோல கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வர்களாக பிளஸ் 1 தேர்வு எழுதி தோல்வி அடைந்த 690 தனித்தேர்வர்களும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதினர்.

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி முடிந்தது. இதையடுத்து, அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது. தேர்வு எழுதியுள்ள  மாணவ, மாணவியர் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில்  தங்கள் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். அந்தந்த மாவட்ட  ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தாங்கள் அளித்த செல்போன் எண்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள்  அனுப்பி வைக்கப்படும். பிளஸ் 1 மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் தற்காலிக மதிப்பெண் வழங்கப்படும். அச்சிட்ட மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும் வரை இந்த தற்காலிக சான்றுகள் செல்லும். இந்த சான்றுகள் 14ம் தேதி பிற்பகல் முதல் பள்ளிகள், தேர்வு  மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். 16ம் தேதி பிற்பகலுக்கு பிறகு மாணவர்களே www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கையொப்பமிட்டால் மட்டுமே செல்லும்.

மறுகூட்டல்

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 10ம் தேதி பிற்பகல் முதல் 11 மற்றும்  13ம் தேதி ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275, மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205, கட்டணம் செலுத்த  வேண்டும். இதற்கு  பிறகு தேர்வுத்துறை அறிவிக்கும் நாட்களில் மாணவர்களே தங்கள் விடைத்தாள் நகல்களை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். துணைத் தேர்வுபிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்கு ஜூன் மாதம் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை  சிறப்பு துணைத் தேர்வு  நடக்கும். இந்த துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள்  குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: