×

அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் அலைமோதிய கூட்டம்

* நள்ளிரவையும் பொருட்படுத்தாமல் நகை வாங்கினர்

* 10 ஆயிரம் கிலோவுக்கு தங்கம் விற்பனை?


சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு, நகைக்கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. நள்ளிரவையும் பொருட்படுத்தாமல் நகைகளை மக்கள் வாங்கி சென்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் கிலோ அளவுக்கு நகை  விற்பனையானதாக கூறப்படுகிறது.சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில்  தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர  விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.அதன்படி, இந்தாண்டு அட்சயதிருதியை 2 நாட்களில் வந்தது. அதாவது, நேற்று அதிகாலை 3.27 மணி முதல் இன்று (8ம்தேதி) அதிகாலை 2.37 மணி வரை வந்தது. அட்சய திருதியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் நகைக்கடைகளில்  மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 6 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. அதேபோல, சென்னை தி.நகர், புரசைவாக்கம், வடபழனி,  வண்ணாரப்பேட்டை உட்பட பல இடங்களில் உள்ள நகைகடைகள் அனைத்தும் அட்ச திருதியைக்காக அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. மக்கள் ஆர்வமுடன் காலையிலேயே  நகைக்கடைகளுக்கு வந்து நகைகளை வாங்கி சென்றதை காண  முடிந்தது.  நேரம் ஆக ஆக மேலும் கூட்டம் அதிகரித்தது. மாலையில் இந்த கூட்டம் இரட்டிப்பானது. நகை கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் முன் பண ரசீதை கொடுத்து தேர்வு செய்த நகைகளை வாங்கி சென்றனர். முன்பதிவு செய்யாத  மக்கள் காத்திருந்து தங்கத்தை தேர்வு செய்து வாங்கினர். மேலும் செய்கூலி, சேதாரத்தில் சிறப்பு தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தது. அட்சயதிருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் புதுபுது டிசைன்களில் தங்க  நகைகள் விற்பனைக்காக வந்துள்ளது.

எடை குறைவான நெக்லஸ், பேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் உள்பட பலவிதமான நகைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் தங்களுக்கு பிடித்த நகைகளை மக்கள் தேர்வு செய்து வாங்கி சென்றனர். குறிப்பாக டெம்பிள்  ஜூவல்லர்ஸ் நகைக்கு அதிக கிராக்கி இருந்தது. பொதுமக்கள் வசதிக்காக நள்ளிரவிலும் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர்.இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: அட்சயதிருதியைக்காக வாடிக்கையாளர்களை கவரும் வகையில்  புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டிருந்தது.  பொதுமக்கள்  வசதிக்காக நள்ளிரவிலும் கடைகளை திறந்து வைத்திருந்தோம். முன்பதிவும் கடந்த ஆண்டை விட 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. விற்பனை என்பது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 30 சதவீதம் வரை  அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த ஆண்டு சுமார் 8 ஆயிரம் கிலோவுக்கு மேல் தங்க நகை விற்பனையானதாக கூறப்படுகிறது. சாதாரண நாட்களில் தமிழகம் முழுவதும் நாளைக்கு 1500 முதல் 2500 கிலோ வரை தங்கம்  விற்பனையாகும். ஆனால், இந்த ஆண்டு 2 நாட்கள் அட்சயதிருதியை வந்தது. இதனால் சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு மேல் நகை விற்பனை நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எவ்வளவு விற்பனையாகி உள்ளது என்ற முழு விவரம்  இன்று தெரியவரும் என்று நகை வியாபாரிகள் கூறினர்.

தங்கம் சவரனுக்கு ₹40 அதிகரிப்பு
தங்கம்  விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வந்தது. நேற்று  முன்தினம் ஒரு கிராம் ₹3017க்கும், ஒரு சவரன் ₹24,136க்கும்  விற்கப்பட்டது. இந்த நிலையில் அட்சய திருதியையான நேற்று தங்கம் விலை சற்று   அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ₹5 அதிகரித்து ஒரு கிராம் ₹3022க்கும்,  சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ₹24,176க்கு விற்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : summit ,jewelers ,occasion , sake ,Tiruchi, whirlwind, jewelry
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு