×

கர்நாடகாவில் பசவண்ணர் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்

பெங்களூரு: ஆன்மிக பற்றுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்ட மகான் பசவண்ணர் ஜெயந்தி விழா கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த 12ம் நூற்றாண்டில் பிறந்த பசவண்ணர் ஆன்மிக சேவையுடன், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து தர்மநெறியில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். அவரின் பிறந்த நாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பெங்களூரு சாளுக்யா சர்க்கிளில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் வி.ஆர்.வாலா, முதல்வர் எச்.டி.குமாரசாமி, உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், பெங்களூரு மாநகர மேயர் கங்காம்பிகே, முன்னாள் அமைச்சர் லீலாவதி ஆர்.பிரசாத் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசவ சமதி சார்பில் அதன் தலைவர் அரவிந்த ஜாட்டி தலைமையில் பெங்களூருவில் நடந்த விழாவில் ஜெயதேவா இதய நோய் சிகிச்சை மருத்துவமனை இயக்குனர் சி.என்.மஞ்சுநாத்திற்கு பசவண்ணர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜெ.என்.கண்டேராவ், எச்.எம்.சாமி, ஜி.என்.பசவராஜப்பா ஆகியோருக்கு பசவ விபூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இன்போசிஸ் பவுண்டேஷன் தலைவர் சுதாமூர்த்திக்கு தாசோஹரத்னா விருது வழங்கப்பட்டது. விழாவில் சுதாமூர்த்திக்கு பதிலாக அவரது சகோதரி விருதை பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் மேயர் கங்காம்பிகே, பேலி மடத்தின் மடாதிபதி சிவருத்ர சுவாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பெங்களூரு விஜயநகரில் வசனஜோதி நண்பர்கள் குழு, மடிவாளா மாசிதேவா ஆன்மிக அறக்கட்டளை, கன்னட சங்கம், பெங்களூரு மல்லேஷ்வரத்தில் ஜெயகர்நாடக அமைப்பு சார்பில் பசவ ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பெங்களூரு பல்கலைக்கழகம், ஹம்பி பல்கலைக்கழகம், துமகூரு சித்தகங்கா பல்கலைக்கழகம், பெலகாவி ராணிசென்னம்மா மகளிர் பல்கலைக்கழகம், மைசூரு மானசகங்கோதரி பல்கலைக்கழகம் உள்பட மாநில அரசின் கீழ் இயங்கிவரும் பல்கலைக்கழகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகங்கள், தாலுகா, நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள், பல்வேறு ஆன்மிக அறக்கட்டளைகள் சார்பில் பசவண்ணர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Basavana Jayanthi Kolakala Celebration ,Karnataka , Karnataka, Basavantar Jayanthi, Celebration
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...