கர்நாடக முதல்வராக சித்தராமையா மீண்டும் பதவியேற்க வேண்டும்: உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கருத்தால் சர்ச்சை

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா மீண்டும் பதவியேற்க வேண்டும் என்று சிக்கபள்ளாபுரா தொகுதி எம்எல்ஏ சுதாகர் கூறி இருக்கும் கருத்துக்கு எனது ஆதரவு உள்ளது என்று உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்து இருப்பது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பசவண்ணர் ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்பி பாட்டீல் கூறியதாவது: மாநிலத்தில் ஆபரேஷன் தாமரை திட்டத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜவுக்கு இழுப்பது தொடர்பாக சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் பி.எஸ்.எடியூரப்பா பேசியுள்ள ஆடியோ தொடர்பான புகாரை விசாரணை நடத்த எஸ்.ஐ.டி. அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அதை நிறுத்தி வைத்துள்ளோம். மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் முதல்வர் குமாரசாமியுடன் பேசி சிறப்பு விசாரணை படை (எஸ்ஐடி) அமைக்கப்படும்.

மேலும் பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த சரஸ்வதி சிலையை  அகற்றிவிட்டு புத்தர் சிலை நிறுவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. என்னை பொறுத்தவரை இருக்கும் சிலையை அகற்றிவிட்டு இன்னொரு சிலை நிறுவுவது சரியான நடைமுறை கிடையாது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கும்படி மாநில போலீஸ் ஐஜி மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 16 முதல் 18 தொகுதிகளிலும் மஜத 3 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும். பாஜ 22 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சி தலைவர்கள் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் யார் சொல்வது உண்மை என்பது தெரிந்துவிடும்.

மண்டியா தொகுதியில் கூட்டணி தர்மம் காப்பாற்றப்படவில்லை என்று சிலர் கூறுவது உண்மையல்ல. நிகில்குமாரை ஆதரித்து துணைமுதல்வர் பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ், நீர்பாசனதுறை அமைச்சர் டி.கே.சிவகுமார் உள்பட பலர் பிரசாரம் செய்துள்ளோம். கட்சி தொண்டர்கள் சிலர் தவிர்த்திருக்கலாம், தலைவர்கள் யாரும் அலட்சியம் காட்டவில்லை. அதேபோல் துமகூரு தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தோல்வியடைவார் என்று பாஜ எம்எல்ஏ சுரேஷ்கவுடா கூறியுள்ளதாக மீடியாக்களில் செய்தி வந்துள்ளது. மே 23ம் தேதி வரை சுரேஷ்கவுடா காத்திருந்தால் உண்மை தெரியும்.

கர்நாடக மாநில முதல்வராக மீண்டும் சித்தராமையா பதவியேற்க வேண்டும் என்று சிக்கபள்ளாபுரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சுதாகர் கூறியுள்ளார்.

அவரின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். முதல்வர் பதவி எதிர்பார்க்கும் பட்டியலில் நானும் இருக்கிறேன். ஆனால் சித்தராமையா முதல்வராக வேண்டுமானால் நான் காத்திருக்க தயாராக உள்ளேன். மாநிலத்தில் ஐந்தாண்டுகள் சிறப்பான ஆட்சி கொடுத்த அவர் இரண்டாவது முறையாக முதல்வராகி இருக்க வேண்டும். மக்கள் அந்த வாய்ப்பை வழங்காமல் விட்டனர்.

தற்போது கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. இக்கூட்டணி ஆட்சி ஐந்தாண்டுகள் முழு பதவிகாலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் விருப்பமாக உள்ளது. அவரின் விருப்பத்தை காங்கிரஸ் தலைவர்கள் நிச்சயம் பூர்த்தி செய்வோம். மஜதவுக்கு கொடுத்துள்ள ஆதரவு ஐந்தாண்டுகள் முழுமையாக தொடரும் என்பதில் மாற்று கருத்தில்லை என்றார்.

இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளி

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் 21ம் தேதி 4 திருச்சபைகள் உள்பட பல இடங்களில் நடந்த தற்கொலை படை தாக்குதல் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி பெங்களூருக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளோம்.

இதுபோல் பரவும் தகவல்களில் சில சமயத்தில் உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும். தகவலை அலட்சியம் செய்யாமல் விழிப்புடன் உள்ளோம். தற்போது கிடைத்துள்ள தகவல்படி யாரோ டிரக் டிரைவர் பெங்களூருவில் உள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பாக மாநில உளவுதுறையினர் விழிப்புடன் உள்ளனர் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>