இவங்க அக்கப்போர் தாங்கமுடியல: இடைத்தேர்தலில் பாஜ வெற்றி பெற்று விட்டது - எடியூரப்பா, காங்கிரஸ் வெற்றிபெறும் - சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் நடக்கும் இரு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். ஆனால் இரு தொகுதியில் பாஜ எப்போதோ வெற்றி பெற்று விட்டது என மாநில பாஜ தலைவர் எடியூரப்பா அடித்து கூறுகிறார்.
மாநிலத்தில் காலியாகவுள்ள சிஞ்சோளி மற்றும் குந்தகோளா ஆகிய இரு சட்டபேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இரு தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சிஞ்சோளி தொகுதியில் சுபாஷ் ராதோடும், குந்தகோளா தொகுதியில் மறைந்த முன்னாள் அமைச்சர் சி.எஸ்.ஷிவள்ளியின் மனைவி குசுமாவதியும் போட்டியிடுகிறார்கள். பாஜ சார்பில் சிஞ்சோளி தொகுதியில் அவினாஷ்ஜாதவ், குந்தகோளா தொகுதியில் சிக்கண்ணா கவுடரு ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இரு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மூத்த தலைவர்கள் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநிலத்தில் எனது தலைமையிலான ஆட்சியில் செய்துள்ள சாதனைகள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

அதேபோல் தற்போதைய மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் சிறப்பாக திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் இரு தொகுதிகளிலும் கடந்த 2018ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், அதே வெற்றி கிடைக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான பாஜ எவ்வளவு விமர்சனங்கள் முன்வைத்தாலும், இரு தொகுதி வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இடைத்தேர்தல் வெற்றி மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரிய பலமாக அமையும் என்றார்.

இது குறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறும்போது, இடைத்தேர்தலில் முதல்வர் குமாரசாமி அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் முகாமிட்டு பிரசாரம் செய்தாலும், இரு தொகுதியில் அரசு இயந்திரம் பயன்படுத்தி எத்தனை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தினாலும் பாஜ வெற்றியை தடுக்க முடியாது. எங்கள் வெற்றி எப்போதோ உறுதியாகிவிட்டது. இரு தொகுதிகளில் தேர்தல் முடிவு மாநில அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மத்தியில் மீண்டும் மோடி பிரதமராக பொறுப்பேற்பார். மாநிலத்தில் பாஜ ஆட்சி அமையும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Congress ,Sitaramaya ,Yeddyurappa , by-elections, BJP wins, Yeddyurappa, Congress victory, Siddaramaa
× RELATED பாஜக தலைவர்களை காப்பாற்றவே நீதிபதி...