×

துரியோதனனின் அகந்தை மோடியிடமும் உள்ளது: பிரியங்கா விளாசல்

அம்பாலா: மகாபாரத கதாபாத்திரம் துரியோதனிடம் இருந்த அகந்தை பிரதமர் மோடியிடமும் உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
 அரியானா மாநிலம் அம்பாலா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் குமாரி செல்ஜாவை ஆதரித்து கட்சியின்  பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று அம்பாலாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது:

பிரதமர் மோடி இந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, தான் செய்த மேம்பாட்டு பணி தொடர்பாக பேசாமல் மக்களின் கவனத்தை திசை  திருப்பும் வகையில் பேசி வருகிறார். அகங்காரம் மற்றும் அகந்தை கொண்டவர்களை நாடு ஒருபோதும் மன்னிக்காது. மகாபாரதத்தில் இதற்கு சிறந்த  உதாரணம் உள்ளது. துரியோதனன் அகந்தை பிடித்தவன். கடவுள் கிருஷ்ணர் துரியோதனனை புரிந்துக் கொண்டு திருத்த முயற்சித்தபோது அவரையே  தன்வசப்படுத்த முயன்றான். ஒருவர் வீழ்ச்சியை சந்திக்கும் முன் அவரது அறிவில் பாதிப்பு ஏற்படும். மோடிஜி உங்களுக்கு தைரியம் இருந்தால் இந்த  தேர்தலை மேம்பாட்டு பணி, வேலைவாய்ப்பு, விவசாயிகள் மற்றும் பெண்கள் பிரச்னை குறித்து பேசவேண்டும்.

 கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்? எதிர்க்காலத்தில் பொதுமக்களுக்கு என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை தெரிவிக்கவேண்டும்.  இதை உணர்ந்து செயல்படாவிட்டால் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள். இந்திய மக்கள் அறிவார்ந்தவர்கள். அவர்களை நீங்கள் தவறாக  வழிநடத்த முடியாது. பாஜ தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும்போது முன்பு அவர்கள் ஏற்கனவே அளித்த தேர்தல் வாக்குறுதியை ஏன்  நிறைவேற்றவில்லை என்பது பற்றி பேசுவதே இல்லை. உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்கள் குறித்து பேசுகிறார்கள், சில நேரம் நாட்டுக்காக  உயிர்நீத்த எனது குடும்பம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் ஒருபோதும் உங்கள் தேவைகள் குறித்து பேசுவதில்லை அல்லது அதை எப்படி தீர்ப்பது  என்பதுகுறித்தும் பேசுவதில்லை. இந்த தேர்தல் ஒரு குடும்பம் தொடர்பானதல்ல. பல கோடி குடும்பங்கள் தொடர்பானது. அவர்களது ஆசைகள் நம்பிக்கைகளை இந்த அரசும் பிரதமர்  மோடியும் முறித்து விட்டனர். இவ்வாறு பிரியங்கா பேசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Duryodhana ,Priyanka Valsal , Duryodhana's, Pride, Modi, Priyanka, Vallal
× RELATED போளூர் அருகே துரிஞ்சிகுப்பத்தில் துரியோதனன் படுகளம், தீமிதி விழா