×

துபாயில் சேனலை நடத்த முடியாமல் வெளிநாட்டிற்கு தப்பிய இந்தியர்: 7 மாத ஊதியம் வழங்கவில்லை என புகார்

துபாய்: துபாயில் மலையாள சேனல் நடத்தி வந்த இந்தியர் ஒருவர், கடன் தொல்லையால் வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டதாகவும்  அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 7 மாதம் வரையிலான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான துபாயின் ஜூமேரியா பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் `சேனல் டி’  தொடங்கப்பட்டது. இதற்கு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் கிளை உள்ளது. இந்நிறுவனம் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடிசலாட்  நிறுவனம் மூலம் ஒளிபரப்பி வந்தது.  

இதனிடையே பெருகி வந்த கடன்  தொல்லையால், ஊழியர்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் சேனலின்  உரிமையாளரும் நிதித் துறை தலைவரும் துபாயில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டதாக கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.  ஆனால், சேனலின் உரிமையாளர் பெயரும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து அந்நிறுவனத்தில் பணிபுரிந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், `எங்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.  வேறுநாட்டில் இருந்து புதிய முதலீட்டாளர்கள் வருகிறார்கள். கடனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. நாங்களும்  நிறுவனத்தின் நிலைமை சீராகும் என்று நம்பி காத்திருந்தோம். ஆனால் இப்படி நடக்குமென்று நினைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தப்பட்டது. ஏப்ரல் மாதம் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்போதாவது  நாங்கள் சுதாரித்திருக்க வேண்டும்’ என்று கூறினார்.தற்போது அந்த சேனலில் பழைய நிகழ்ச்சிகள் மறுஒளிபரப்பாகி வருகிறது. இம்மாத இறுதியில் எடிசலாட் நிறுவனத்துடனான ஒப்பந்தம்  முடிவடைந்ததும், சேனல் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian ,Dubai , In Dubai, abroad, Indian, 7 monthly wages,
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்