×

கழிவுநீர் தேக்கம், சிதிலமடைந்த சாலை, மின்விளக்கு பழுது அடிப்படை வசதியில்லாத பல்லாவரம் பஸ் நிலையம் : பயணிகள் தவிப்பு

பல்லாவரம்: பல்லாவரம் பஸ் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியில் வளர்ந்து வரும் பகுதியாக பல்லாவரம் திகழ்கிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், இறைச்சி, காய்கறி மார்க்கெட், பள்ளி, கல்லூரிகள், காவல் நிலையம், மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையின் இருபுறமும் கடந்த திமுக ஆட்சியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து கிண்டி மார்க்கமாகவும், சென்னையில் இருந்து தாம்பரம் மார்க்கமாகவும் இயக்கப்படும் மாநகர பஸ்கள் இங்கு நின்று செல்கின்றன. தினசரி நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த பஸ் நிலையத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், நிழற்குடை மேற்கூரை துருப்பிடித்து வலுவிழந்து காணப்படுகிறது. சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும், சாலை பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், பேருந்துகள் நிலையத்தினுள் வந்து, பயணிகளை ஏற்றிச் செல்லாமல் ஜிஎஸ்டி சாலையிலேயே நின்று செல்கின்றன. பயணிகளும் பஸ்சுக்காக சாலையில் காத்திருப்பதால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘பேருந்து நிலையத்தில் குடிநீர், பொது கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியோர் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுதவிர, பேருந்து நிலையத்துக்குள் தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், பேருந்துகள் சாலையிலேயே நின்று செல்கின்றன. மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் அச்சத்துடன் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பல்லாவரம் பேருந்து நிலையத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,bus station , Sewage stagnation, damaged road, refurbishment , basic lighting Pallavaram bus station
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி