×

இலங்கையில் பாதுகாப்பு மீட்கப்பட்டுள்ளது குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரின் கதையும் முடிந்து விட்டது

கொழும்பு: ‘‘ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கைதாகி உள்ளனர். இதனால் நாட்டில் பாதுகாப்பு மீட்கப்பட்டுள்ளது’’ என பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த 21ம் தேதி ஈஸ்டர் தினத்தில் 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 47 குழந்தைகள் உட்பட 257 பேர் பலியாயினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புடன் தொடர்புடைய உள்நாட்டைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருப்பதாக இலங்கை அரசு நடத்திய விசாரணையில் உறுதியானது. இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் சிஐடி மற்றும் தீவிரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். நாடு முழுவதும் முப்படைகளும், போலீசாரும் மேற்கொண்ட கடும் சோதனையின் மூலம் வெடிகுண்டு கிடங்குகள், தீவிரவாத பயிற்சி முகாம்கள் கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 15 நாட்களாக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை குறித்து முப்படை தளபதிகளும், பொறுப்பு காவல்துறை தலைவரான சந்தனா விக்ரமரத்னேவும் கூட்டாக பேட்டி அளித்தனர். அதில் விக்ரமரத்னே கூறியதாவது:

ஈஸ்டர் தினத்தில் 3 தேவாலயங்கள், 3 சொகுசு ஓட்டல்களில் நடத்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் நேரடி தொடர்புடைய அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர். மனித வெடிகுண்டாக வந்தவர்கள் அனைவரும் உள்நாட்டை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அந்த அமைப்பின் 2 வெடிகுண்டு நிபுணர்களும் கொல்லப்பட்டு விட்டனர். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பை தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. இந்த சமயத்தில் உறுதி செய்யப்படாத தகவல்களை  பரப்ப வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். உறுதிப்படுத்தப்படாத பாதுகாப்பு அச்சுறுத்தகல்கள் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படுவதை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சனானயாகே கூறுகையில், ‘‘கடந்த 2 வாரமாக நாட்டில் இயல்புநிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்’’ என கூறி உள்ளார். இதேபோல, குண்டுவெடிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் இலங்கை அரசு எடுத்து வருகிறது. அளித்து வரும் சுற்றுலா துறையை மேம்படுத்த ஓட்டல் தொழிலுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கு வர மாணவர்கள் அச்சம்

குண்டுவெடிப்புக்குப் பின் பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. தற்போது நிலைமை சீரானதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் முறையாக பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலான பெற்றோர் அஞ்சினர். இதனால் வருகை சதவீதம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. பெற்றோரிடம் உள்ள அச்சத்தை போக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொறுப்பு காவல்துறை தலைவர் விக்ரமரத்னே தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bombing ,Sri Lanka , Security Recovered , Sri Lanka, bombing has ended
× RELATED மதுரை மாவட்டம் மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை!