×

போலி இணையதளம் மூலம் பிரபல சிமென்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் மோசடி

மும்பை: தங்களது நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, தங்களது வாடிக்கையாளர்களை பினாமி வங்கி கணக்கில்  சிமென்ட் மூட்டைகளுக்கான பணத்தை டெபாசிட் செய்யுமாறு கூறி பெரும் அளவில் பணம் மோசடி நடந்துள்ளது என்று சைபர் கிரைம் போலீசில்  அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம் சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்களும் இது தொடர்பாக மும்பையில் எம்ஐடிசி போலீஸ்  நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பெயரில் ‘அம்புஜாசிமேன்ட்.இண்ட்.இன்’ என்ற பெயரில் போலியாக இணையதளம் ஒன்றை தொடங்கிய மோசடி  பேர்வழிகள் அதன் மூலம் சிமென்ட் மூட்டைகளுக்கு ஆர்டர்கள் பெற்றுள்ளனர். பின்னர் சிமென்ட் மூட்டைகளுக்கான பணத்தை தாங்களது பினாமி  வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். பணம் செலுத்தியவர்களுக்கு சிமென்ட் மூட்டைகள் உரிய நேரத்தில் சப்ளை செய்யப்படவில்லை.  இதையடுத்து, பணம் செலுத்தியவர்கள் நிறுவனத்தை அணுகியபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்தனர்.

இப்படி பணம் செலுத்தி  ஏமாந்தவர்கள் ஏராளமானவர்கள் என்பது பின்னர்தான் தெரியவந்தது. இந்த மோசடி அம்பலமான நாள் வரையில் நிறுவனம் ரூ.1.8 லட்சம்  இழந்துள்ளது என்று வழக்கறிஞர் பிரசாந்த் மாலி தெரிவித்தார். தானேயைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் 200 சிமென்ட் மூட்டைகளுக்கு ஆர்டர் கொடுத்து ஏமாந்துள்ளார். அதேபோல், கொல்கத்தாவைச் சேர்ந்த  வாடிக்கையாளர் ஒருவரும் ஏமாந்துள்ளார். இணையதளம் மூலம் பண பரிவர்த்தனை மற்றும் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் அதன் உண்மை தன்மையை அறிந்து  கொள்ள வேண்டும் என்றும், மேலும் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும்  சைபர் சட்ட நிபுணரான பிரசாந்த் மாலி மேலும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : customers , Fake website, cement company, customers, fraud
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...