×

கன்னியாகுமரி கடலில் குவிந்த குண்டு கற்கள்: சுற்றுலா பயணிகள் கடும் அவதி அதிகாரிகள் கவனிப்பார்களா?

கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் புனித நீராடி வருகின்றனர். இதுதவிர கோயில் கும்பாபிஷேகம், திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இங்கிருந்து புனிதநீர் எடுத்து  செல்லப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் தற்போது பக்தர்கள், சுற்றுலா பயணிகள் புனித நீராட முடியாத அளவுக்கு சீரழிந்து கிடக்கிறது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தினால் இடிபாடுகளுக்கு உள்ளான கட்டிடங்களின் கற்களும், பாறாங்கற்களும் முக்கடல் சங்கம பகுதியில் குவிந்து கிடக்கின்றன. சுனாமி  தாக்குதல் முடிந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் ராட்சத பாறாங்கற்கள் இன்று வரை அகற்றப்படவில்லை.

முக்கடல் சங்கம பகுதியில் கடல் அரிப்பை தடுக்க பல கோடி ரூபாய் மதிப்பிலான குண்டு கற்களை கொட்டினர். ஆனால் இந்த கற்கள் தற்போது சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை உயிர்ப்பலி வாங்க துடிப்பது போல் காட்சியளிக்கிறது.  மேலும் இவை கடலின் இயற்கை அழகையும் கெடுக்கும் வகையில் உள்ளன. இதனால் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இந்த செயற்கை குண்டு கற்களால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராட முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆடி, தை அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக,  கன்னியாகுமரி கடலில் நீராட ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.  இப்படி வரும் பக்தர்கள் நீராடிவிட்டு ரத்தக் காயங்களுடன் திரும்பும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கடல் சங்கமத்தில் ஏற்கனவே போடப்பட்டு இருந்த அலைத்தடுப்பு சுவரினால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் உள்வாங்கி பாறைகளும், மணல் திட்டுகளும் வெளியே தெரிகின்றன.  புதிதாக அமைக்கப்பட்ட இந்த அலைத்தடுப்பு சுவரினால் நீண்ட,  நெடிய, பரந்து விரிந்து காணப்பட்ட கடற்கரை மணல் பரப்பே காணாமல் போய் விட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஆடி, தை அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் கன்னியாகுமரி கடலுக்கு புனித நீராட வரும் பக்தர்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
  எனவே ஆடி அமாவாசையன்று புனித நீராடும் பக்தர்களுக்கு ரத்த காயம் ஏற்படுவதை தடுக்க கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுனாமியால் அடித்து வரப்பட்டு கடலுக்குள் குவிந்து கிடக்கும் ராட்சத பாறாங்கற்கள் மற்றும் குண்டு  கற்களை அகற்ற வேண்டும் என்பது பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி பேரூராட்சி, இந்து அறநிலையத்துறை ஆகிய 3 துறைகளும் இணைந்து நடவடிக்கை எடுப்பார்களா?  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanyakumari Sea , Kanyakumari sea, bomb stones, tourists, officials
× RELATED கன்னியாகுமரி கடலில் ராட்சத அலை...