×

சந்திரசேகர ராவுடனான சந்திப்பு நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது : பினராயி விஜயன் பேட்டி

திருவனந்தபுரம் : நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் மே 23ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணியை உருவாக்குவதில் கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகர ராவ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். பாஜக தரப்பில் மீண்டும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் தரப்பில் ராகுலை இதுவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. இந்நிலையில் மாநில கட்சிகள் இணைந்து 3வது அணி அமைத்து மத்தியில் ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் தொலைபேசியில் பேசினார். அதனைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து தேசிய அரசியல் குறித்து விவாதித்தார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், மூன்றாவது அணி குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் என்னுடன் விவாதித்தார் என்றும், தேசிய அரசியல் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை காங்கிரஸ் மற்றும் பாஜக பெறாத நிலையில் மத்தியில் ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகளின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தற்போது இருக்கும் மத்திய அரசு குறித்து பேசியதாகவும், மத்திய அரசு மாநில அரசுகளை இத்தனை நாட்கள் ஏமாற்றி வந்தது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். நாங்கள் பேசியது தேசிய அரசியலில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இனி மத்திய அரசு இருக்கும் என்றும அவர் உறுதியாக கூறியுள்ளார். மேலும் பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த விதமான முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் தகவல் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandrasekara Rao ,interview ,Pinarayi Vijayan , Chandrasekara Rao, Pinarayi Vijayan, Lok Sabha election
× RELATED ஐதராபாத் நகரின் பெயரை மாற்றுவோம்...